2017-11-16 14:32:00

பாசமுள்ள பார்வையில்.. நேர்மையை உணர்த்திய தாய்


ஓர் ஊரில் இரத்தினசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் நகருக்கு சென்று திரும்பும் வழியில் முப்பது தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டு சோர்வுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழியில் கண்ட ஏழைத் தாய் ஒருவர், அவர் சோர்வாக இருப்பதற்குக் காரணம் கேட்டார். சில நாட்கள் சென்று, அந்த ஏழைத் தாய் நகருக்குச் சென்று திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதைக் கண்டார். அந்தப் பை இரத்தினசாமி செல்வந்தருடையது எனத் தெரிந்துகொண்டு, அதை அவரிடம் கொடுத்தார். தங்க நாணயங்களைப் பெற்றுக்கொண்ட இரத்தினசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவர் அத்தாயிடம், நான் இந்த பையில் நாற்பது தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்தப் பையில் இப்போது முப்பது தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் பத்து நாணயங்களைத் திருப்பித் தரவேண்டுமென கேட்டார். அந்த ஏழைத் தாயின் குணம் பற்றி ஊரில் அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நண்பர்கள் இருவர், ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தைக் கேட்ட ஊர் தலைவர், இரத்தினசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களைத் தொலைத்தாய் எனக் கேட்டார். அதற்கு அவர், நாற்பது தங்க நாணயங்கள் என பொய் சொன்னார். இப்போது ஊர் தலைவர், ஏழைத் தாயைப் பார்த்து, நீ எவ்வளவு தங்க நாணயங்களைக் கண்டுபிடித்தாய் என்றார். அதற்கு அவர், முப்பது தங்க நாணயங்கள் என்றார். இருவரின் பதிலையும் கேட்ட ஊர் தலைவர், இரத்தினசாமியைப் பார்த்து, அப்பெண் கண்டெடுத்திருப்பது வெறும் முப்பது தங்க நாணயங்கள், நீ தொலைத்திருப்பதோ நாற்பது தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது நாற்பது தங்க நாணயங்களைக் கொண்டுவந்தால் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம் என்றார். பின் அந்த ஏழைத் தாயைப் பார்த்த தலைவர், அம்மா, நீ கண்டெடுத்திருப்பது இரத்தினசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துக் கொள்ளலாம் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.