2017-11-17 14:16:00

ஒப்புரவு,மன்னிப்பு,அமைதியை அறிவிக்க மியான்மாருக்கு வருகிறேன்


நவ.17,2017. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாகிய, ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் அமைதியை அறிவிப்பதற்காக, மியான்மாருக்கு வருகை தருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டுக்கு காணொளிச் செய்தி ஒன்றை, இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ளார்.

இம்மாதம் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை மியான்மாருக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், இத்திருத்தூதுப் பயணத்தின் நோக்கத்தை விளக்கியுள்ளார்.

மியான்மார் கத்தோலிக்க சமூகத்தின் கடவுள் நம்பிக்கையையும், அச்சமூகம் நற்செய்திக்குச் சான்று பகர்வதையும், உறுதிப்படுத்தும் நோக்கத்திலும், இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை.

நற்செய்தி, ஒவ்வொரு மனிதரின் மாண்பைப் போதித்து, நாம் ஒவ்வொருவரும், மற்றவருக்கு, குறிப்பாக, ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம் இதயங்களைத் திறக்கச் செய்கின்றது எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

அதேநேரம், பொது மக்கள் மத்தியில், நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும் மதித்து ஊக்கப்படுத்தும் நல்லுணர்வில் இந்நாட்டைப் பார்வையிட விரும்புகிறேன் என்றும், அச்செய்தியில் பேசியுள்ளார் திருத்தந்தை.

ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதிலும், மதிப்பதிலும், ஆதரவளிப்பதிலும் நாம் வளரவேண்டுமென்ற உணர்வு, மத நம்பிக்கையாளர்கள் மற்றும், நல்மனம் கொண்டவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம், ஏனென்றால் நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.  

மியான்மாரில், இப்பயணத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் அனைவரும் மகிழ்விலும் அமைதியிலும் வாழ்வதற்காகச் செபிக்கின்றேன், விரைவில் சந்திப்போம் என்று, இக்காணொளி செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.