2017-11-17 14:31:00

வன்முறை நிறைந்துள்ள உலகில் மதங்களின் பங்கு


நவ.17,2017. மோதல்கள் நிறைந்துள்ள இன்றைய உலகிற்கு, ஒவ்வொரு மதத்தினரும் தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில், புதிய நம்பிக்கையை வழங்கவேண்டியது மிகவும் இன்றியமையாத தேவையாக உள்ளது என்று, புத்த -கிறிஸ்தவ கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தாய்வான் நாட்டின் தாய்பேய் நகரில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் வெளியிட்ட, பத்து எண்கள் கொண்ட இறுதி அறிக்கையில், இயேசுவின் அன்பு மற்றும், புத்தரின் கருணை பற்றி பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு கலாச்சாரம் நிலவுகின்ற உலகில், அமைதி மற்றும் வன்முறையற்ற கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு, இந்தக் கலந்துரையாடல் கூட்டம் முக்கியமான மைல்கல்லாக அமைந்திருந்தது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டவிழ்க்கப்பட்ட தேசியவாதம், பாலியல் வன்முறை, இனவாதம், சாதியம், சமய மற்றும், இன அடிப்படைவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும், வறுமை, அநீதி, சமத்துவமின்மை, பாகுபாடு, உரிமை மீறல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும், நாம் எல்லாரும் ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வில், உபசரிப்பை ஊக்குவிக்க வேண்டும், சுற்றுச்சூழல் நெருக்கடியை உணர்ந்து, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாக்க வேண்டும் போன்றவை அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக அமைதி, இதயத் தூய்மை, இரக்கம், கருணை, மன்னிப்பு, தன்னையே வழங்குதல், குணப்படுத்தல் போன்றவற்றை வளர்ப்பதற்கு, செபம், மௌனம், தியானம் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்சமய மற்றும் பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடல்களை ஊக்குவிப்பதற்கு, கல்வி நிறுவனங்கள், சமய அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் நன்மனம் கொண்டோர் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 13, இத்திங்களன்று ஆரம்பித்த இக்கூட்டம், நவம்பர் 16, இவ்வியாழனன்று நிறைவடைந்தது. தாய்பேய் Ling Jou புத்த துறவு இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில் 18 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.