2017-11-17 14:24:00

வறியோர்க்கான மருத்துவ முகாமைப் பார்வையிட்டார் திருத்தந்தை


நவ.17,2017. “நாம் ஏழைகளைச் சந்திக்கவும், பகிர்ந்துகொள்வது எப்படி என்பதையும், கற்றுக்கொள்ள வேண்டும். இதன் வழியாக நம் வாழ்வுமுறை மாற்றம் பெறும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், உரோம் நகர் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இவ்வியாழன் மாலையில் பார்வையிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 19, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், முதல் உலக வறியோர் நாளையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ முகாமில் பணியாற்றும் தன்னார்வலப் பணியாளர்கள் மற்றும், சிகிச்சைக்காகக் காத்திருந்த ஏழைகளையும் சந்தித்து சிறிதுநேரம் உரையாடினார் திருத்தந்தை.

இந்த இலவச மருத்துவ முகாம், இத்தாலிய செஞ்சிலுவை சங்கத்தால், இந்த வாரம் முழுவதும் காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை இயங்கி வருகிறது. இதயம், தோல் உள்ளிட்ட, சில நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் பணியாற்றுகின்றனர்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவில் திருத்தந்தை அறிவித்த உலக வறியோர் நாள் நிகழ்வுகளை, திருப்பீட புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை நடத்தி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.