2017-11-18 15:29:00

அர்ஜென்டீனா நீர்மூழ்கி கப்பலில் காணாமல்போயுள்ளவர்க்கு செபம்


நவ.18,2017. “இறைமக்களின் செபங்களின் ஆதரவின்றி, பேதுருவின் வழிவருபவர் தனது திருப்பணியை நிறைவேற்ற இயலாது. உங்கள் அனைவரின் செபங்களில் நம்பிக்கை வைத்துள்ளேன்!” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் மற்றும், உரோம் புனித பவுல்  பசிலிக்கா நேர்ந்தளிப்பு திருநாளாகிய இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை, தனது தலைமைப்பணிக்கு விசுவாசிகளின் செபம் மிகவும் அவசியம் என்று, தன் டுவிட்டரில் எழுதியுள்ளார்.

மேலும், தென் அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த புதன்கிழமை முதல் காணாமல்போயுள்ள, அர்ஜென்டீனா நாட்டு நீர்மூழ்கி போர்க் கப்பலில் பணியாற்றிய 44 பேருக்காக, தான் உருக்கமாகச் செபிப்பதாக, அந்நாட்டு இராணுவ ஆன்மீகப் பணியாளருக்குச் செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனா நாட்டு இராணுவ ஆன்மீகப் பணியாளர் ஆயர் சந்தியாகோ ஒலிவேரா அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், காணாமல்போயுள்ளவர்களின் குடும்பங்களுக்கும், அர்ஜென்டீனா இராணுவ அதிகாரிகளுக்கும், நாட்டு மக்களுக்கும், திருத்தந்தையின் செபங்களும், ஒருமைப்பாடும் நிறைந்த செய்தியை அனுப்பியுள்ளார்.   

நீர்மூழ்கி கப்பலில் காணாமல்போயுள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரையும் ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை.

'Ara San Juan' என்ற அர்ஜென்டீனா நாட்டு கடற்படை  நீர்மூழ்கி கப்பல், தனது வழக்கமான பணியை முடித்து திரும்பிக்கொண்டிருந்தபோது, புவனோஸ் அய்ரெஸ் கடற்கரைக்கு 430 கிலோ மீட்டர் தூரத்தில், கடந்த புதனன்று காணாமல்போயுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகள், இக்கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.