2017-11-18 15:37:00

சமத்துவமின்மைகளை அகற்றுவதற்கு இரக்கம் இன்றியமையாதது


நவ.18,2017. உலக அளவில், நலவாழ்வில் நிலவுகின்ற சமத்துவமின்மைகள் பற்றி, வத்திக்கானின் ஆயர்கள் மாமன்ற புதிய அரங்கில், இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த 32வது பன்னாட்டுக் கருத்தரங்கிற்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மூன்று நாள் கருத்தரங்கை நடத்திய, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுக்கு இச்செய்தியை  அனுப்பியுள்ள திருத்தந்தை, நோயுற்றுள்ள நம் சகோதர சகோதரிகளைப் பராமரிப்பதன் வழியாக, ஆண்டவருக்குச் சேவையாற்றும் பணியாளருக்கு மிகவும் அவசியமான கூறு பற்றி விளக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மனிதரின் தேவைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி, அவர்களுக்குப் பணியாற்றுவதற்கு நிர்வாக அமைப்புமுறை அவசியம் எனினும், நலவாழ்வு பணியாளர்கள், தாங்கள் பராமரிக்கும் நோயுற்றோர் சொல்வதைக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறும் நம் அயலவரைப் பராமரிப்பதில் நல்ல சமாரியரின் இரக்கம் நிறைந்த செயலைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நலவாழ்வு அமைப்பில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஏனையப் பணியாளர்களுக்கு இரக்கம் இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

நீதியை ஊக்குவிக்க, இரக்கம் முக்கியமான வழி, ஏனென்றால், பிறரின் உணர்வுகளோடு ஒன்றித்திருப்பது, அவர்களின் போராட்டங்கள், இன்னல்கள் மற்றும் பயங்களை மட்டுமல்ல, அவர்களின் தனித்துவமிக்க மதிப்பையும் மாண்பையும் கண்டுணரவும் உதவுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.