2017-11-18 14:13:00

பாசமுள்ள பார்வையில் - "வறியோரே திருஅவையின் சொத்து, கருவூலம்"


மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமையப் பேரரசன் வலேரியன், கத்தோலிக்க திருமறையைச் சேர்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள் அனைவரையும் கொல்லும்படி ஆணையிட்டான். கோவில் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்தான். அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய, புனித 2ம் சிக்ஸ்துஸ் அவர்கள், தன் மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து, இலாரன்ஸ் என்ற இளையவரை தியாக்கோனாக அருள்பொழிவு செய்து, திருஅவையின் உடைமைகள் அனைத்திற்கும், அவரை, பொறுப்பாளராக நியமித்தார்.

258ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, திருத்தந்தை 2ம் சிக்ஸ்துஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், கைது செய்யப்பட்டு, பின்னர், கொல்லப்பட்டார். இளைய தியாக்கோன் இலாரன்ஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். அவரே திருஅவை சொத்துக்கள் அனைத்திற்கும் பொறுப்பானவர் என்பதைக் கேள்விப்பட்ட வலேரியன், ஒரு நிபந்தனையின் பேரில் அவருக்கு விடுதலை தந்தான். மூன்று நாட்களில், இலாரன்ஸ் அவர்கள், திருஅவை சொத்துக்கள் அனைத்தையும் மன்னனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே, அந்த நிபந்தனை.

தன் இல்லம் திரும்பிய இலாரன்ஸ் அவர்கள், கோவிலுக்குச் சொந்தமான அனைத்து செல்வங்களையும் விற்று, வறியோருக்கு வழங்கினார். ஆகஸ்ட் 10ம் தேதி, பேரரசன் வலேரியன் அரண்மனைக்கு முன் நின்றார், இலாரன்ஸ். கோவில் சொத்துக்கள் எங்கே என்று மன்னன் கேட்டபோது, இலாரன்ஸ் அவர்கள், தனக்குப் பின் ஆயிரக்கணக்கில் நின்றுகொண்டிருந்த வறியோர், வியாதியுற்றோர், கைம்பெண்கள் அனைவரையும் சுட்டிக்காட்டி, "அரசே, இதோ நீங்கள் கேட்ட செல்வங்கள். இவர்களே, திருஅவையின் சொத்து, கருவூலம், எல்லாம்" என்று கூறினார்.

"வறியோரே, திருஅவையின் சொத்து, கருவூலம்" என்று, 3ம் நூற்றாண்டில் முழக்கமிட்ட புனித இலாரன்ஸ் அவர்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை நினைவுகூர, அந்த உண்மையை வாழ்வில் நடைமுறைபடுத்த, நவம்பர் 19, இஞ்ஞாயிறன்று, வறியோர் உலக நாளைச் சிறப்பிக்கின்றோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.