2017-11-18 15:47:00

வட ஆசியாவின் அமைதி ஆயுதங்களைச் சார்ந்து இல்லை


நவ.18,2017. ஆசியாவின் வடக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது ஆயுதங்களைச் சார்ந்து இல்லை என்று, கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

ஜப்பானின் Kagoshimaவில், கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் இணைந்து இவ்வாரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தி வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு ஆசியாவின் நிலைமை கவலை தருகின்றது என்றும், வட ஆசியாவிலுள்ள நாடுகள், தங்கள் நாடுகளின் வளமைக்கும், நிலையான தன்மைக்கும், அதிக வல்லமைகொண்ட அரசியல் அமைப்போடு கூட்டுச் சேருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலைமை, எல்லா நாடுகளிலும் அச்சுறுத்தல்களையும், மனஇறுக்கங்களையும் ஏற்படுத்தி, நாடுகளின் பாதுகாப்பில் பதட்டநிலைகளை உருவாக்குகின்றது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

வடகிழக்கு ஆசியாவில் அமைதி நிலவும் என்று தாங்கள் நம்புவதாகவும், அப்பகுதியில் போர் குறித்த எந்தவிதமான கருத்தையும் புறக்கணிப்பதாகவும், அணு ஆயுதங்கள் அல்லது இராணுவ நடவடிக்கையால் அமைதியைக் கொணர முடியும் என்ற தவறான நம்பிக்கையை ஒவ்வொருவர் மனத்திலுமிருந்து கடவுள் அகற்றுவாராக என்றும் ஆயர்கள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர். 

வன்முறை, மனித மாண்பைக் குறைத்து மதிப்பிடுகின்றது மற்றும், அது மனித சமுதாயம் முழுவதிற்கும் பேரழிவைக் கொணர்கின்றது என்றும், மனிதர் மத்தியில் நம்பிக்கை, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை உருவாக்குவதன் வழியாக, எந்த விதமான வன்முறையையும் தவிர்க்க முடியும் என்றும், கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.