2017-11-20 16:10:00

திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரை


நவ.20,2017. அனைவரும் மதிப்புடன் கூடிய ஒன்றிணைந்த வாழ்வை மேற்கொள்ளமுடியும் என்பதற்கு, மத்தியக் கிழக்குப் பகுதிக்கும், உலகம் முழுமைக்கும், லெபனான் நாடு தொடர்ந்த எடுத்துக்காட்டாக விளங்கமுடியும் என்ற தன் நம்பிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

இஞ்ஞாயிறு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த 20,000த்திற்கும் மேற்பட்ட விசுவாசிகளுக்கு, நண்பகல் மூவேளை செப உரை வழங்கியபின், லெபனான் குறித்த தன் அக்கறையை வெளியிட்டத் திருத்தந்தை, போராலும், மோதல்களாலும் வேதனைகளை அனுபவித்துவரும் லெபனான் நாட்டில், பதட்ட நிலைகள் அதிகரித்துவருவதை மனதில் கொண்டு, அனைத்துலக சமுதாயம், அமைதிக்கான முயற்சிகளை, குறிப்பாக, மத்தியக் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

அர்ஜென்டீனா நாட்டில், காணாமல் போயிருக்கும் இராணுவ நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றிய அனைவருக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

மேலும், கடவுளைக் குறித்து எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை, ஏனெனில், அவர் ஒரு கண்டிப்பான முதலாளி அல்ல, மாறாக, அன்பும், கனிவும், நன்மைத்தனமும் கூடிய ஒரு தந்தை என்று தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் குறித்த உலக நாள், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதையும் தன் மூவேளை செப உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தின் கடமைகளையும், ஓட்டுனர்களின் பொறுப்புணர்வையும் தான் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.