2017-11-20 15:22:00

பாசமுள்ள பார்வையில்.. தாயன்பு வேற்றுமை பாராது


கடந்த செப்டம்பர் 23ம் தேதி, நிதி மோசடி குற்றச்சாட்டின்பேரில் விசாரணைக்காக, மத்திய சீனாவிலிருக்கும் ஷான்ஜி ஜிங்காங் இண்டர்மீடியேட் மக்கள் (Shanxi Jinzhong Intermediate People’s Court) நீதிமன்றத்துக்கு, ஒரு பெண் அழைத்து வரப்பட்டிருந்தார். அப்பெண், பிறந்து நான்கே மாதங்களான கைக்குழந்தையின் அம்மாவும்கூட. நீதிமன்றத்தில், அவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 33 பேர்களுடன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விசாரணைக்காக உள்ளே செல்லும் முன், அப்பெண், தன் குழந்தையை பெண் காவல்துறை அதிகாரியான லினா ஹயோ (Lina Hao) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார். இந்நிலையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அந்தப் பெண் வெளியில் வர முடியாத ஒரு சூழலில், அவரது கைக்குழந்தை பசியால் வீறிட்டு அழத் தொடங்கியது. வெளியில் நின்ற பலரும் குழந்தையின் அழுகையை நிறுத்த பலவழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் எவராலும் முடியவில்லை. எனவே, காவல்துறை அதிகாரி லினா ஹயோ அவர்கள், உடனடியாக, குழந்தையின் அம்மாவிடம் சென்று, குழந்தையின் அழுகையை நிறுத்த அதற்கு நானே பாலூட்டலாமா? என்று அனுமதி கேட்டார். அத்தாயும் மிகுந்த மகிழ்வோடு சம்மதித்தார். அந்த வளாகத்தில் ஒதுக்குப்புறமான, அமைதியான ஓரிடத்துக்கு குழந்தையை எடுத்துச் சென்று, தானே பாலூட்டினார் அந்த அதிகாரி. அதன் பிறகே அந்தக் குழந்தையின் அழுகை நின்றது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த குற்றம் சாட்டப்பட்ட பெண், அதிகாரி லினா ஹயோ அவர்களின் செயலால் பேச்சிழந்து, தனது நன்றியை வாய்விட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் மனமிளகி அங்கிருந்து சென்றார். இந்நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை அதிகாரி லினா ஹயோ அவர்கள், ‘நானும் அண்மையில்தான் தாயானேன் என்பதால், அந்தக் குழந்தையின் அழுகையையும், அதன் அம்மாவின் இயலா நிலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவேதான் எதைப் பற்றியும் சிந்திக்காமல் குழந்தைக்குப் பாலூட்டினேன் என்றார். ஆம். தாயன்புக்கு ஈடு இணையே இல்லை. அதற்கு வேற்றுமை பாராட்டத் தெரியாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.