2017-11-21 15:28:00

நைஜீரிய கிறிஸ்தவர்களின் நிலை குறித்து ஜெர்மன் திருஅவை


நவ.21,2017. உலகின் வெவ்வேறு பகுதிகளில் மத நம்பிக்கைகளுக்காக துன்புறும் கிறிஸ்தவர்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஜெர்மன் ஆயர்கள், தற்போது நைஜீரியக் கிறிஸ்தவர்கள் குறித்து தங்கள் கவனத்தை திருப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அரபு தீபகற்பம், ஈராக், சிரியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் குறித்து ஆய்வு செய்துள்ள ஜெர்மன் ஆயர் பேரவை, இம்மாதம் 29ம் தேதி பெர்லின் நகரில் கூடி, வட நைஜீரியாவில் கிறிஸ்தவர்களின் நிலை குறித்து விவாதிக்க உள்ளது.

அன்றைய பத்திரிகையாளர் கூட்டத்தில், நைஜீரியாவில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமின் வரலாறு, தற்போதைய மோதல்கள், தொடர் வன்முறைகளுக்கான பின்னணி போன்றவை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் வட பகுதியில் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து, இம்மாதம் 19ம் தேதி ஜெர்மன் ஆயர்கள் நடத்தியுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியின் Sokoto மறைமாவட்ட ஆயர் Matthew Kukah அவர்கள், வட நைஜீரியாவில் பல்வேறு மதங்களிடையே இணக்க வாழ்வு என்பது குறித்தும், கத்தோலிக்க பிறரன்பு நிறுவனமான Missioவின் தலைவர் அருள்பணி Klaus Krämer அவர்கள், இஸ்லாமிய கிறிஸ்தவ கலந்துரையாடலில் Missio நிறுவனத்தின் ஈடுபாடு குறித்தும் உரையாற்றுவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.