2017-11-21 14:50:00

பாசமுள்ள பார்வையில் - ஒலி அலைகள் வழியே உறவுகள்


தன் தாயை இழந்த 6 மாதக் குழந்தையைப் பற்றிய ஒரு காணொளி குறும்படம், 'வாட்ஸப்' வழியே, வலம் வந்தவண்ணம் உள்ளது. அக்குழந்தையின் தாய் பாடிவந்த ஒரு பாடலை, வேறொருவர் பாடும்போது, அக்குழந்தையின் கண்கள், கண்ணீரால் நிறைகின்றன. அதே நேரம், குழந்தையின் உதடுகளில், ஓர் இனம் புரியாத புன்னகையும் தெரிகிறது. இந்தக் காணொளியைக் காண்போரின் கண்கள், கட்டாயம் ஈரமாகும்.

கருவில் வளரும் குழந்தைக்கு கேட்கும் திறன் முதலில் உருவாகிறது என்றும், குழந்தைக்கும், தாய்க்கும் இடையே, ஒலி அலைகள் வழியே உறவுகள் உருவாகின்றன என்றும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பிறந்தபின், குழந்தைக்கும், தாய்க்கும் இடையே உருவாகும் நெருக்கமானப் பிணைப்பிற்கு, இசை, குறிப்பாக, தாலாட்டுப் பாடல், ஒரு முக்கிய கருவியாக அமைகிறது என்பதும், உலகறிந்த உண்மை. அதே வண்ணம், இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே உறவை வளர்க்கவும், இசை, ஒரு பாலமாக அமைகிறது. "இசையால் வசமாகா இதயம் எது, இறைவனே இசை வடிவம் எனும்போது" என்ற பக்திப் பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

நவம்பர் 22, இப்புதனன்று, புனித செசிலியா திருநாளைச் சிறப்பிக்கின்றோம். தெய்வீக இசையின் பாதுகாவலர் என்று கத்தோலிக்கத் திருஅவையால் போற்றப்படுபவர் புனித செசிலியா. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பெண் செசிலியா, உரோமைய உயர்குடி மகனான வலேரியன் என்பவரை மணம் புரிந்து, அவரையும் கிறிஸ்தவ மறையைத் தழுவச் செய்தார். மதம் மாறிய வலேரியன், மறை சாட்சியாக உயிர் நீத்தார். இதைத் தொடர்ந்து, இளம்பெண் செசிலியாவின் கழுத்து, மும்முறை வாளால் வெட்டப்பட்டாலும், தலை துண்டிக்கப்படவில்லை என்றும், வாளால் காயப்பட்ட நிலையில் மூன்று நாள்கள் வாழ்ந்த செசிலியா, இறைவனைப் புகழ்ந்து பாடியவண்ணம் தன் உயிரை நீத்தார் என்றும் பாரம்பரியக் கதைகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.