சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வியுரை : திருப்பலியில் நம் மீட்புப் பணி தொடர்கிறது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரையின்போது - AP

22/11/2017 15:28

நவ.22,2017. இப்புதனன்று, திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்குச் செவிமடுக்க பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகளும், சுற்றுலாப்பயணிகளும் குழுமியிருக்க, முதலில், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலிலிருந்து ஒரு சிறு பகுதி வாசிக்கப்பட்டது. 'கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே, இனி வாழ்பவன் நானல்ல. கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்பு கூர்ந்தார், எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். நான் கடவுளின் அருள் பயனற்றுப் போக விடமாட்டேன்' என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், 'இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா மறையுண்மையின் நினைவே திருப்பலி' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே,

திருப்பலி குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, 'மரணத்திலிருந்து வாழ்வுக்கு கிறிஸ்து கடந்து சென்றதன் நினைவே திருப்பலி’ என்பது குறித்து நோக்குவோம். விவிலியத்தை நோக்கும்போது, 'நினைவாக ஆற்றுதல்' என்பது, கடந்த ஒரு நிகழ்வை வெறும் ஞாபகத்தில் வைப்பதை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக, அந்த நிகழ்வின் பிரசன்னத்தை மீண்டும் கொணர்ந்து, அதன் மீட்பு சக்தியில் நம்மை பங்கு கொள்ள உதவுவதாகும். இயேசு கிறிஸ்து, சிலுவையில் ஆற்றியதுபோல், ஒவ்வொரு திருப்பலியின் போதும் நம்மீது அவரின் இரக்கத்தைப் பொழிகிறார். இதன் வழியாக, நம் இதயங்களையும், வாழ்வையும், உலகம் முழுமையையும் புதுப்பிக்கிறார். 'சிலுவைப்பலி, பீடத்தில் கொண்டாடப்படும்போதெல்லாம், நம் மீட்புப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் திருச்சபை பற்றிய கோட்பாட்டு விளக்க ஏடு கூறுகிறது(Lumen Gentium 3). ஒவ்வொரு ஞாயிறும், கிறிஸ்து, பாவம் மற்றும் மரணம் மீது கொண்ட வெற்றிக்குள் நாம் நுழைவதுடன், தூய ஆவியின் வல்லமையால், நாம், இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் பங்களிக்கப்படுகிறோம். ஆண்டவரின் பாஸ்கா மறையுண்மையின் இருப்பைக் கொணர்வதன் வழியாக, நாமும் சாட்சிகளாக விளங்க திருப்பலி நமக்குப் பலத்தை வழங்குகிறது. அந்தக் காலத்து மறைசாட்சிகள்போல், இயேசுவின் மரணத்தின்மீதான வெற்றிக்கு சாட்சிகளாக விளங்குவதுடன், இறைவனைப்போல் பிறரை அன்புகூரவும், அவர்களின் நலனுக்காக நம்மையே கையளிக்கவும் தேவையான பலத்தைப் பெறுகிறோம்.

இவ்வாறு திருப்பலி குறித்த தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைத்து மக்களுக்கும் தன் வாழ்த்துக்களையும் ஆபோஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

22/11/2017 15:28