2017-11-22 15:46:00

இலங்கை ஆயர் : போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு


நவ.22,2017. இலங்கையில் நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்ட, கிழக்கு மற்றும் வட பகுதியில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான கைம்பெண்களுக்கு உதவி வருகிறார், மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா.

இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரினால், குறைந்தது 89 ஆயிரம் பெண்கள், கைம்பெண்களாக ஆகியுள்ளனர் என்றும், தங்கள் குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் கைம்பெண்களின் மறுவாழ்வுக்கு மட்டக்களப்பு மறைமாவட்டம் உதவி வருகின்றது என்றும் கூறியுள்ளார், ஆயர் பொன்னையா.

இந்நடவடிக்கை குறித்து யூக்கா செய்தியிடம் பேசியுள்ள ஆயர் பொன்னையா அவர்கள், மட்டக்களப்பு மறைமாவட்டத்தில், போரினால் கணவர்களை இழந்து வாழ்கின்ற 32 ஆயிரம் கைம்பெண்கள் சாதாரண வேலைகளைச் சார்ந்துள்ளனர் எனவும், ஏறக்குறைய இரண்டாயிரம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், போரில் தந்தையரை இழந்த குடும்பங்களிலிருந்து நூறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதமும், 2,500 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாகக் கூறிய ஆயர் பொன்னையா அவர்கள், தங்களிடம் உதவி பெறுகின்றவர்களில் அதிகமானவர்கள், இந்துக்களும், முஸ்லிம்களும் என்றும் கூறினார்.

இந்து தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில், சிறுபான்மையாக, முஸ்லிம்களும், சிங்களவர்களும் உள்ளனர். அம்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 3.67 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.