2017-11-22 15:01:00

திருத்தந்தை, சவுதி அரேபிய அதிகாரி சந்திப்பு


நவ.22,2017.  “நாம் பிறரைச் சந்திக்கும்போது, பிறரன்பின் கதகதப்பை வழங்குகிறோமா அல்லது பூட்டிய அறைக்குள், நெருப்பின் முன்னே அமர்ந்து, நம்மை நாமே கதகதப்பாக்கிக் கொள்கிறோமா?” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்குச் செல்லுமுன், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் அதிகாரி, Abdullah bin Fahad Allaidan அவர்களைச் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், உணவு வங்கி நிறுவனத்தின் பிரதிநிதிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற சனிக்கிழமையன்று, ஏழைகளுக்காக உணவு சேகரிக்கும் இவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தினார்.

கடந்த ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வறியோர் நாளின் தொடர்ச்சியாக, உணவு வங்கி நிறுவனத்தினர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார், திருத்தந்தை,

இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித செசீலியாவின் விழாவையும் நினைவுபடுத்தியத்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரையறையின்றி அன்புகூர்வது பற்றியும், தூய்மையான அன்பு பற்றியும்  புனித செசீலியாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.