2017-11-22 14:52:00

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ


நவ.22,2017. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராகப் பணியாற்றிய, ஆயர் பிதேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ (Fidelis Lionel Emmanuel Fernando) அவர்களை, இப்புதனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1948ம் ஆண்டு மே 20ம் தேதி யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆயர் இம்மானுவேல் அவர்கள், கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கென 1973ம் ஆண்டு சனவரி 6ம் நாள், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர், 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு, 2012ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் பெற்றோர், தமிழகத்தின் தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த வேம்பார் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர், கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பை முடித்து, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புனித அலாய்சியஸ் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில், மெய்யியலை முடித்த இவர், இறையியல் படிப்புக்காக உரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். உரோம் உர்பானியானம் பாப்பிறை கல்லூரியில் இறையியலை முடித்து, அறநெறியியலில் முதுகலை பட்டமும் பெற்றார். 

1981ம் ஆண்டு முதல், 1987ம் ஆண்டு வரை, கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆயர் இம்மானுவேல் அவர்கள், பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

1981ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டத்தில், ஏறக்குறைய 85 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.