2017-11-23 14:48:00

கருத்தியல் வழி காலனிய ஆதிக்கம் – திருத்தந்தையின் கவலை


நவ.23,2017. சுதந்திரத்தைப் பறித்தல், வரலாற்று நினைவுகளை அழித்தல், இளம் உள்ளங்களில் கொள்கைத் திணிப்பு ஆகிய மூன்றும், கருத்தியல் வழி காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டும் அடையாளங்களாகத் திகழ்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக மக்கபேயர் நூலிலிருந்து வாசிக்கப்படும் முதல் வாசகத்தில், மன்னன் அந்தியோக்கு எப்பிபான் கடைபிடித்த கொடுமையான வழிகள் கூறப்பட்டுள்ளதை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை கருத்துக்களை வழங்கி வருகிறார்.

இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், கருத்தியல் வழி காலனிய ஆதிக்கம் நடைபெறுவதை மீண்டும் ஒருமுறை தன் மறையுரையின் மையக்கருத்தாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சர்வாதிகாரத்தின் பல வடிவங்களை மனித வரலாறு அனுபவித்துள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பாடத்திட்டங்களில் மாற்றங்களை உருவாக்கி, வருங்காலத் தலைமுறையினர் மீது கருத்துத் திணிப்பு நடைபெறுவதைக் குறித்து கவலை வெளியிட்டார்.

மன்னன் எப்பிபானின் கட்டளைகளை எதிர்த்து நின்ற அன்னையைக் குறித்து இப்புதனன்று வாசித்தோம் என்பதை தன் மறையுரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, சர்வாதிகாரிகளுக்கு எதிராக, பெண்கள் துணிவுடன் நின்றது, நமக்கெல்லாம் பெரும் பாடம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், "இறுதி காலத்தில் ஆண்டவர் நம்மைச் சந்திக்க வரும்போது, நம் ஆனந்தம் அளவிடமுடியாதவண்ணம் இருக்கும். அந்த சந்திப்பின் எதிர்பார்ப்பில் நாம் வாழ்கிறோம்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழன் காலை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.