2017-11-23 15:20:00

கோலா லம்பூரில் துவக்கப்பட்டுள்ள திருப்பீடத் தூதரகம்


நவ.23,2017. மலேசியாவில் வாழும் கத்தோலிக்க சமுதாயத்தின் மேலும், பொதுவாக, மலேசிய மக்களின் மேலும் கத்தோலிக்கத் திருஅவை கொண்டிருக்கும் அக்கறையின் ஒரு வெளிப்பாடாக, கோலா லம்பூரில் திருப்பீடத் தூதரகம் துவக்கப்பட்டுள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மலேசியாவின் தலைநகர், கோலா லம்பூரில், புதிதாக நிறுவப்பட்டுள்ள திருப்பீடத் தூதரகத்தின் துவக்க விழா, நவம்பர் 23, இவ்வியாழனன்று, நடைபெற்ற வேளையில், திருப்பீடச் செயலரின் சார்பில், இவ்விழாவில் கலந்துகொண்ட, பேராயர் ஆஞ்செலோ பெச்சூ (Angelo Becciu) அவர்கள் இவ்வாறு கூறினார்.

புதிய தூதரக துவக்க விழாவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்களை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட பேராயர் பெச்சூ அவர்கள், நற்செய்தி, மற்றும் நன்னெறி விழுமியங்களை, அனைத்து நாடுகளிலும் விதைக்கவே, தூதரகங்கள் அமைக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

மலேசியா நாட்டில் நிறுவப்பட்டுள்ள இத்தூதரகத்தின் துவக்க விழாவில், கோலா லம்பூர் முன்னாள் பேராயர், கர்தினால் அந்தனி சோட்டேர் பெர்னாண்டஸ் உட்பட பல ஆயர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.