2017-11-23 14:59:00

திருத்தந்தை: 'சிறியோர்' என்று அழைக்கப்படுவதே ஒரு வரம்


நவ.23,2017. வறியோருக்கும், வாழ்வில் வாய்ப்பிழந்தோருக்கும் பிரான்சிஸ்கன் சபையின் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தோர் ஆற்றி வரும் பணிகள் குறித்து தன் மகிழ்வையும், பாராட்டுக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயரால் பணியாற்றிவரும் குடும்பத்தின் முதல் நிலை, மற்றும் மூன்றாம் நிலை உறுப்பினர்களை நவம்பர் 23, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இத்துறவு குடும்பத்தின் உறுப்பினர்கள், Minors அதாவது, 'சிறியோர்' என்று அழைக்கப்படுவதே ஒரு வரம் என்று குறிப்பிட்டார்.

இறைவனைச் சந்தித்து, ஆழ்நிலை தியானத்தில் மூழ்கியதிலும், கிறிஸ்துவின் எளிய, சிறிய சகோதரர்களான வறியோருக்கு உதவியதிலும் புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்வு கழிந்தது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

சிறியோராய் இருப்பது என்ற நிலை, இறைவனைச் சந்திக்க, அனைத்து மனிதரையும், சகோதர, சகோதரிகளாகச் சந்திக்க, படைப்பைச் சந்திக்க, என்ற மூன்று சந்திப்புக்களுக்கு ஏற்ற நிலை என்று தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த மூன்று நிலைகளுக்கும் விளக்கங்கள் வழங்கினார்.

கோவிலை சீர்செய்து, கட்டியெழுப்புமாறு இறைவன் வழங்கிய அழைப்பைக் கேட்டு, தன் பணிவாழ்வைத் துவங்கிய புனித பிரான்சிஸ் வழங்கியுள்ள ஆன்மீகத்தில், சீர்செய்வதும், கட்டியெழுப்புவதும் ஓர் அடிப்படை அம்சமாக உள்ளது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.

நாம் சந்திக்கும் அனைத்து மனிதருக்கும் இணையாக, அல்லது, தாழ்ந்தவராக நம்மைக் கருதுவது, 'சிறியோர்' என்ற அழைப்பின் முக்கிய பண்பு என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, இத்தகைய மனநிலை ஒருவருக்கு இரக்கம், பரிவு ஆகிய குணங்களையும் வழங்கும் என்று கூறினார்.

படைப்பு அனைத்தையும் தன் உடன்பிறந்தோராகப் பாவித்த புனித பிரான்சிஸ் காட்டியுள்ள வழியில், நாம் அனைவருமே, நமது பொதுவான இல்லமாகிய படைப்பைப் பேணும் பண்பை வளர்த்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரான்சிஸ்கன் சபைகளின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.