2017-11-23 14:25:00

பாசமுள்ள பார்வையில்.. தாயின் செயல் கற்றுத் தந்த பாடம்


அந்த வகுப்பு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு இயற்கைப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக, ஒரு காட்டுப் பாதை வழியாக அவர்களுடன் சென்று கொண்டிருந்தார். வழியில், பழைய, கிழிந்த ஒரு ஜோடி காலணிகளை அவர்கள் பார்த்தனர். அவை, அங்கு வயலில் களை எடுத்துக்கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த ஏழை அம்மாவுடையது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். அந்தக் காலணிகளை ஒளித்து வைத்து வேடிக்கை பார்க்க விரும்பினர் மாணவர்கள். ஆனால் ஆசிரியரோ, வயதானவர்களுடன் இப்படி விளையாடக் கூடாது, அதற்குப் பதிலாக, காலணிகளில் காசுகளை வைத்து ஒளித்து வைப்போம் என்று ஆலோசனை கூறினார். மாணவர்களும் அதன்படி செய்து, அந்த அம்மா வந்து காலணிகளைத் தேடிப் போடும்வரைக் காத்துக் கொண்டிருந்தனர். அன்று வேலையை முடித்து தன் காலணிகளைத் தேடி எடுத்த அந்த அம்மா, முதலில் ஒன்றை மாட்டினார். அதில் ஏதோ கனமாகத் தென்படுவதை உணர்ந்து அதைக் கழற்றிப் பார்த்தார். காசுகள் இருப்பதைக் கண்டார் அவர். அடுத்த காலணியையும் போட்டபோது அவ்வாறே உணர்ந்து அதிலிருந்தும் காசுகளை எடுத்தார். அந்த இடத்தில் யாரும் இல்லையென்பதை அறிந்து அந்தக் காசுகளை தன் முந்தானையில் முடிந்துகொண்டார் அந்த அம்மா. பின் அந்த இடத்திலே மண்டியிட்டு கைகளை விரித்து, கடவுளே, எனது வயதான கணவரின் மருந்துச் செலவுக்கும், என் குடும்பத்தின் உணவுக்கும், இன்று யாரோ ஒருவர் வழியாக, படியளந்ததற்கு கோடான கோடி நன்றிகள் என்று, கண்ணீர்மல்கச் செபித்தார். பின்னர் வீட்டிற்குப் புறப்பட்டார் அவர். அந்நேரத்தில் மாணவர்கள் கண்களிலும் கண்ணீர். பிறருக்குத் தொல்லைகளை உருவாக்குவதைத் தவிர்த்து, நம்மால் இயன்றபோதெல்லாம் பிறருக்கு உதவ வேண்டும். ஏனென்றால் கொடுப்பது, பிறருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் மகிழ்வைத் தருகின்றது என்ற பாடத்தை அன்று மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.