2017-11-23 15:06:00

பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை கடைப்பிடித்த ‘சிவப்பு புதன்’


நவ.23,2017. உலகெங்கும் துன்பங்களுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளியிடும் வண்ணம், பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை, நவம்பர் 22, இப்புதனை, ‘சிவப்பு புதன்’ என்று கடைப்பிடித்தது.

தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக பல நாடுகளில் வன்முறைகளைச் சந்தித்துவரும் இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள பல கோவில்கள், மற்றும் கத்தோலிக்க கல்விக்கூடங்களில் சிவப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

அதிர்ச்சி தரும் வகையில், எண்ணிக்கையிலும், துன்ப அளவிலும் கொடுமைகளைச் சந்திக்கும் கிறிஸ்தவர்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வை, பெரும்பான்மையான எண்ணிக்கையில் கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள பிலிப்பீன்ஸ் நாட்டில் உருவாக்க இந்த திட்டம் வகுக்கப்பட்டது என்று Aid to the Church in Need (ACN) என்ற அமைப்பின் தேசிய இயக்குனர், Jomar Luciano அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

இதையொத்த முயற்சிகள், பிரித்தானிய அரசு, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, இத்தாலி, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டதாக, Aid to the Church in Need அமைப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

 








All the contents on this site are copyrighted ©.