சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

புலம்பெயர்ந்தவர் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு வாய்ப்பு

பொலோஞ்ஞாவில் புலம்பெயர்ந்தவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - EPA

24/11/2017 15:22

நவ.24,2017. “குடிபெயர்ந்தவர் மற்றும் புலம்பெயர்ந்தவர் : அமைதியைத் தேடுகின்றவர்கள்” என்ற தலைப்பில், 2018ம் ஆண்டு சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படும் உலக அமைதி நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தி, இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

போர் மற்றும் பசியினாலும், பாகுபாடு, அடக்குமுறை, வறுமை மற்றும், சுற்றுச்சுழல் சீர்கேட்டாலும், தங்கள் உறைவிடங்களைவிட்டு கட்டாயமாக வெளியேறுகின்ற மக்களை, இரக்க உணர்வுடன் ஏற்போம் என்று, அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்று உலகளவில், குடிபெயர்ந்துள்ள 25 கோடிக்கு மேற்பட்ட மக்களில், 2 கோடியே 25 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், பிறரின் துன்பங்களுக்கு நம் இதயங்களைத் திறந்தால் மட்டும் போதாது, மாறாக, அவர்கள் பாதுகாப்பான இல்லத்தில், அமைதியுடன் மீண்டும் வாழ்வதற்கு நாம் ஆற்ற வேண்டியது இன்னும் அதிகம் உளளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

மக்கள் பெருமெண்ணிக்கையில், குடிபெயர்வதற்கும், புலம்பெயர்வதற்கும் காரணங்களை விளக்கியுள்ள திருத்தந்தை, மக்களின் புலம்பெயர்வு, வருங்காலத்திலும் அதிகரிக்கும் என்று உலக சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இதை ஓர் அச்சுறுத்தலாக நோக்காமல், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு, ஒரு வாய்ப்பாக நம்பிக்கையுடன் நோக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

குடிபெயர்ந்தவர் மற்றும் புலம்பெயர்ந்த மக்களை, நாம் எல்லாரும் ஒரே மனிதக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற, விசுவாசக்கண்ணுடன் நோக்குமாறும் கூறியுள்ள திருத்தந்தை, இம்மக்களையும், மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரையும், வரவேற்று, பாதுகாத்து, உற்சாகப்படுத்தி, சமூகத்தோடு ஒருங்கிணைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இம்மக்கள் குறித்த, இரு உலகளாவிய ஒப்பந்தங்களையும் பரிந்துரைத்துள்ள திருத்தந்தை, குடிபெயர்ந்தவர் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பு சரியான முறையில் மதிப்பிடப்பட்டால், மனித சமுதாயம், மேலும் மேலும் ஓர் உலகளாவிய குடும்பமாக மாறும் என்றும், நம் பூமி, உண்மையான பொதுவான இல்லமாக மாறும் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி அவர்கள் இறந்ததன் நூறாம் ஆண்டு, 2017ம் ஆண்டில் நினைவுகூரப்படும்வேளை, அப்புனிதரின் விழாவாகிய நவம்பர் 13ம் தேதியன்று இச்செய்தியை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

24/11/2017 15:22