2017-11-24 15:04:00

திருத்தந்தை : நம் ஆலயங்கள் சேவைக்காக இருப்பவை


நவ.24,2017. விழிப்புடனிருத்தல், சேவையாற்றுதல், இலவசமாகப் பணியாற்றுதல் ஆகிய மூன்று செயல்களும், தூய ஆவியாரின் ஆலயத்தை, தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார்.

பகைவர்களால் தீட்டுப்படுத்தப்பட்ட ஆலயத்தை, யூதாவும், அவருடைய சகோதரர்களும் மீண்டும் தூய்மைப்படுத்துவது பற்றிய (1மக்க.4,36-37,52-59) முதல் வாசகத்தையும், என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் என்று, இயேசு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டியது பற்றிய நற்செய்தி வாசகத்தையும் (லூக்.19,45-48) மையப்படுத்தி, தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆலயத்தை தூய்மைப்படுத்துதல் குறித்துப் பேசும் இவ்விரு வாசகங்களின் அடிப்படையில், மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, கடவுளின் மிக முக்கியமான ஆலயம், தூய ஆவியார் வாழ்கின்ற நம் இதயம் என்றும், நம் இதயத்திற்குள் நடப்பது குறித்து விழிப்பாயிருக்கின்றோமா, நம் இதயத்தில் பேசும் தூய ஆவியாருக்குச் செவிமடுக்கின்றோமா என்றும் கேள்வி எழுப்பினார்.

நம் இதயத்திற்குள் நடப்பது குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, இந்த ஆலயம், சேவையின் வழியாக எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் மறையுரையில் விளக்கினார்.

தேவையில் இருப்போருக்கு உதவி செய்வதற்கு முன்வருகின்றோமா என்று கிறிஸ்தவர்கள் தங்களின் மனச்சான்றைப் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்திய திருத்தந்தை, இதயத்தைத் தூய்மைப்படுத்துதல் என்பது, பிறர்மீது அக்கறை காட்டுவதாகும் என்றும் கூறினார்.

இலவசமாகப் பணியாற்றுவது பற்றியும் விளக்கிய திருத்தந்தை, நாம் ஓர் ஆலயத்திற்குள் எத்தனைமுறை கவலையுடன் நுழைந்துள்ளோம், ஒரு பங்குத்தளத்தளத்திற்கு, ஓர் ஆயர் இல்லத்திற்குச் செல்வதை நினைத்துப் பார்ப்போம் என்றும் கூறினார்.

இவ்விடங்களுக்குச் செல்லும்போது எத்தகைய உணர்வு ஏற்படுகின்றது? கடவுளின் ஆலயத்திற்குள் இருக்கின்றோம் என்றா? அல்லது பல்பொருள் அங்காடிக்குள் இருக்கின்றோம் என்றா? எனவும் கூறியத் திருத்தந்தை, நம் ஆலயங்கள் பணியாற்றுகின்ற மற்றும் இலவசமாகச் சேவையாற்றுகின்ற இடங்களாக இருக்க வேண்டும் என்றும், இலவசமாகக் கொடுங்கள், மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார் என்றும், மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.