2017-11-24 14:53:00

பாசமுள்ள பார்வையில்: எல்லாமே தாயின் மறு உருவங்கள்,குழந்தைகள்


முருகனுக்கு காடுதான் எல்லாம். அவருக்கு சோறூட்டுவதும், விளையாட இடம் கொடுப்பதும், சுத்தமான காற்றைக் கொடுப்பதும் அந்த காடுதான். அந்த காட்டில் ஓடிய நதி, அவருக்கு வாழ்வை மட்டுமல்ல, வாழ்க்கைக்கு நிம்மதியையும் கொடுத்தது. பகல் வேளைகளில் துள்ளித் திரியும் மான்களையும், இரவில் இரை தேடும் மிருகங்களையும் கண்டு களித்திருக்கிறார். அவைகளுக்கும் இவரைத் தெரியும். ஒரு நாள் புலிக்குட்டி ஒன்று ஆற்றில் தவறி விழுந்துவிட, தாய்ப்புலியோ சோகத்துடன் சப்தமிட்டுக் கொண்டு, குட்டி போன திசையிலேயே கரையோரமாக ஓடிக் கொண்டிருந்தது. கண்மூடி திறப்பதற்குள் தண்ணீரில் குதித்த முருகன்,  அந்த குட்டியை கைகளில் தாங்கி, நீந்திச் சென்று, புலி இருந்த கரையில் விட்டுவிட்டு, மறுகரைக்கு நீந்தி வந்தார். அப்பக்கம் வந்து கொண்டிருந்த ஒரு முனிவர் கேட்டார், 'தம்பி, எப்படி அச்சமில்லாமல் நீரில் குதித்தாய். நீ, அதன் குட்டிக்கு தீங்கு விளைவிக்கப் போகிறாய் என எண்ணி, அந்த புலி உன்னைத் தாக்கியிருந்தால் என்ன செய்வாய்' என்று கேட்டார். ‘இந்த காட்டில் நான் 30 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறேன். எனக்கு அவைகளைத் தெரியும், அவைகளுக்கும் என்னைத் தெரியும். விலங்குகளும் என்னைப்போல் இயற்கையின் குழந்தைகள்தானே. இந்த மண்ணையும் ஆற்றையும், மரங்களையும், ஏன், முழு இயற்கையையும், நான் என் அன்னையாகப் பார்க்கிறேன். இயற்கையை காப்பதில் என் உயிர் மடிந்தாலும், என் தாய் எனும் இந்த மண்ணின் வயிற்றுக்குள் நான் சங்கமமாகி, மீண்டும் அவள் மகனாக புது வடிவம் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார் முருகன். இதுவரை தெரியாத ஒரு புதிய பாடத்தை முருகனிடமிருந்து கற்றுக் கொண்டதாக எண்ணினார் அந்த ஞானி.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.