2017-11-25 14:24:00

கிறிஸ்து அரசர் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


சிம்பாப்வே நாட்டின், பிரதமராகவும், பின்னர், அரசுத்தலைவராகவும் கடந்த 37 ஆண்டுகள் பதவி வகித்த இராபர்ட் முகாபே அவர்கள், நவம்பர் 21, கடந்த செவ்வாயன்று தன் 93வது வயதில் பதவி விலகினார். அவர் பதவி விலகினார் என்று சொல்வதைவிட, பதவியிலிருந்து விலக்கப்பட்டார் அல்லது நீக்கப்பட்டார் என்று சொல்வதே பொருந்தும்.

முகாபே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, பல நாட்டு மன்னர்கள், அரசுத்தலைவர்கள், பிரதமர்கள், மந்திரிகள் ஆகியோரின் அரியணைகளுக்குக் கீழ் நிலநடுக்கத்தை உருவாக்கியிருக்கும் என்பது உறுதி. அரியணைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வாழும் மன்னர்களும், மந்திரிகளும் மலிந்துள்ள இன்றையச் சூழலில், இயேசுவை ஒரு மன்னராக எண்ணிப்பார்க்க தாய் திருஅவை நம்மை அழைக்கிறது. இஞ்ஞாயிறன்று, கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

திருஅவை கொண்டாடும் அனைத்துத் திருநாள்களில், இந்த ஒரு திருநாள், நமக்குள் சங்கடங்களை உருவாக்க வாய்ப்புண்டு. அந்தச் சங்கடத்தை முதலில் தீர்த்துக்கொள்வது நல்லது. கிறிஸ்துவை, நல்லாயனாக, நல்லாசிரியராக, மீட்பராக, நண்பராக,.... இவ்வாறு பல கோணங்களில் எண்ணிப்பார்க்கும்போது, உள்ளம் நிறைவடைகிறது. ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, சங்கடங்கள் எழுகின்றன.

கிறிஸ்து, அரசர், என்ற இரு சொற்கள், நீரும் நெருப்பும் போல, ஒன்றோடொன்று பொருந்தாமல் உள்ளது என்ற எண்ணமே, இந்தச் சங்கடத்தை உருவாக்குகிறது. ஆழ்ந்து சிந்திக்கும்போது, ‘கிறிஸ்து’ என்ற சொல் அல்ல, ‘அரசர்’ என்ற சொல்லே, நம் சங்கடத்திற்குக் காரணம் என்பதை உணர்கிறோம். குறிப்பாக, அரசர் என்றதும், மனத்திரையில் தோன்றும் காட்சிகளே, இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம்.

அரசர் என்றால், மனதில் தோன்றும் உருவம் எது? பட்டும், தங்கமும், வைரமும் மின்னும் உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் ஓர் உருவம்... அரசர் என்றதும் மனதில் தோன்றும் இந்தக் கற்பனைக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் தொடர்பில்லையே. பின், எப்படி, இயேசுவை, அரசர் என்று சொல்வது? இதுதான் நம் சங்கடத்தின் அடிப்படை.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர். ஓர் அரசை உருவாக்கியவர். அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், எல்லைகள் இல்லை, எல்லையைப் பாதுகாக்க, படைபலம் தேவையில்லை, போர் இல்லை, உயிர்பலி தேவையில்லை... எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு இவை எதுவுமே தேவையில்லை.

இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். அத்தகைய மனங்களில், தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கிய பணி. இயேசுவுக்கு அரியணை இல்லையா? உண்டு. தந்தைக்கும், இயேசுவுக்கும் அரியணைகளா? ஆம். யார் பெரியவர் என்ற கேள்வி இல்லாததால், இந்த அரசில், எல்லாருக்குமே அரியணை, எல்லாருக்குமே மகுடம் உண்டு. எல்லாரும் இங்கு அரசர்கள்... இந்த அரசர்கள் மத்தியில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று கற்பனை செய்துகொண்டு, தலையை உயர்த்தி, உயர்வானதோர் இடத்தில் அவரைத் தேடினால், ஏமாந்துபோவோம். உயர்ந்திருக்கும் நம் தலை தாழ்ந்தால்தான் அவரைக் காணமுடியும். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டு இருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அவர்கள் காலடிகளைக் கழுவியவண்ணம் அமர்ந்திருக்கும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே, இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிந்திருந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தங்கள் காலனிய ஆதிக்கத்தின் வழியே, இன்னும் பல கோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. மன்னர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார். கிறிஸ்துவும் ஓர் அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும், மக்கள், குறிப்பாக, தலைவர்கள் கண்டு பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு, தலைவர்கள் பாடங்களைப் பயில்வார்களா என்பது தெரியவில்லை. நாம் பாடங்களை பயில முன்வருவோமே!

குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த அயர்லாந்து நாட்டு அரசர் ஒருவர், தனக்குப் பின் அரியணையில் ஏறும் தகுதியுடைய வாரிசு ஒருவரைத் தேடுவதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார். வாரிசாக விரும்புகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட நாளன்று, அரண்மனைக்கு வரவேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார். தனது வாரிசாக விரும்புகிறவர், கடவுள் மீதும், அயலவர் மீதும், ஆழ்ந்த அன்பு கொண்டவராக இருக்கவேண்டும் என்பது மட்டுமே, அரசர் விதித்திருந்த நிபந்தனை. அரசரின் அறிக்கையைக் கேட்ட பல இளையோர், மிக்க மகிழ்ச்சியோடு அரண்மனையை நோக்கிப் படையெடுத்தனர்.

அந்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு சிற்றூரில், ஏழ்மையில் வாழ்ந்து வந்த ஓர் இளைஞன், கடவுள் பக்தி மிக்கவர், அயலவர் மீதும் அதிக அன்பு கொண்டவர். ஊர் மக்கள் அனைவரும், அந்த இளைஞனை, அரசரின் வாரிசாகும்படி தூண்டினர். ஊர்மக்களிடையே நிதி திரட்டி, அந்த இளைஞன் உடுத்திக்கொள்ள ஓர் அழகான மேலாடையை அவருக்குப் பரிசளித்தனர். அரண்மனைக்குச் செல்லும் நாள் வந்ததும், பயணத்திற்குத் தேவையான உணவையும் தந்து, அவரை வழியனுப்பி வைத்தனர்.

இளைஞன் அரண்மனையை நெருங்கியபோது, பனி பெய்துகொண்டிருந்தது. அரண்மனைக்கு அருகில், வழியோரத்தில், கொட்டும் பனியில், ஒருவர், கிழிந்த ஆடைகளுடன், குளிரில் நடுங்கியவாறு, பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இளைஞன், உடனே, தான் அணிந்திருந்த அந்த அழகிய மேலாடையை அவருக்கு அணிவித்தார். தன்னிடம் எஞ்சியிருந்த உணவையும் அவருக்குக் கொடுத்தார்.

அரண்மனைக்குள் நுழைந்ததும், அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான இளையோரில் ஒருவராக, ஓர் ஓரத்தில் இவர் அமர்ந்தார். அப்போது அரசர் அவைக்குள் நுழைந்தார். அரசரைக் கண்ட இளைஞனுக்கு அதிர்ச்சி. வழியில், அந்தப் பிச்சைக்காரருக்கு, தான் கொடுத்திருந்த மேலாடையை அரசர் அணிந்திருந்தார். அரசர், நேராக இளைஞனிடம் சென்று, அவரை, தன்னுடன் அழைத்துச்சென்றார். தன் அரியணையில் அமரவைத்து, "இவரே என் வாரிசு" என்று அறிவித்தார்.

தன் அரியணையில் ஏறும் தகுதியுடைய வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு வறியோரைப் போல வேடமணிந்த மன்னனைப் பற்றிய கதை இது. இறையரசில் தன்னுடன் அரசாள விரும்புவோரைத் தேர்ந்தெடுக்க வரும் கிறிஸ்து அரசர், ஓர் ஏழையாக வேடமணியாமல், ஏழையாகவே மாறுவதை, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பு உவமை சித்திரிக்கிறது.

மத்தேயு நற்செய்தி 25: 35-36

‘நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்று அரசர் சொல்கிறார்.

அரசரின் இந்தக் கூற்றைக் கேட்டதும் அங்கிருந்தோர் ஆச்சரியமடைகின்றனர். ஏழைகள் சார்பாக, ஏழைகளுக்குத் துணையாக  இறைவன் இருப்பார் என்பதை நேர்மையாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இறைவன், ஓர் ஏழையாகவே மாறி, அவர்களைச் சந்தித்தார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆச்சரியத்துடன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசர் சொன்ன பதில், இந்த உவமையில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது:

மத்தேயு நற்செய்தி 25: 40

அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

ஏழைகள் வடிவில் இறைவன் வருவதை, அல்லது, வாழ்வதை, பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் பல வழிகளில் சொல்லித் தந்துள்ளன. மெக்சிகோவில் வாழ்ந்த Aztec என்ற பழங்குடியினர் எழுதிவைத்த ஒரு கவிதை, இறைவனை இவ்வகையில் அடையாளப்படுத்துகிறது. மண்ணோடு மண்ணாக, சிறு, சிறு துண்டுகளைப்போல் வாழும் மக்களைத் தேடினால், அங்கு அவர்களோடு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இறைவனைக் காணமுடியும் என்பதை, இக்கவிதை கூறுகிறது. இக்கவிதையின் சுருக்கம் இதோ:

"வாழ்வுப் பாதையில் நீங்கள் நடந்து செல்லும்போது, உங்கள் வாழ்வை வழிநடத்தும் ஒரு சக்தியை, கடவுளின் ஒரு சிறு பகுதியை நீங்கள் தேடினால், கீழ்நோக்கி நீங்கள் பார்க்கவேண்டியிருக்கும். நீங்கள் தேடும் கடவுள், சின்ன விடயங்களில் இருப்பார், பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பார். ஒருவேளை, பூமிக்கு அடியிலும் அவர் இருக்கலாம். கடவுளைத் தேடுவோர், தலையைத் தாழ்த்தி, கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும், கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும்"

படைப்பு அனைத்தும் இறைவனின் ஒரு பகுதி என்று பல மதங்கள் கூறுகின்றன. துன்புறும் மனித சமுதாயம், தன்னில் ஒரு பகுதி என்றும்,  இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்றும், இறுதி தீர்ப்பு உவமை ஆணித்தரமாகக் கூறுகிறது.

'ஏழைகள் சார்பில் முடிவெடுப்பது' (‘option for the poor’) என்ற சொற்றொடர், கடந்த 50 ஆண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொற்றொடரின் ஆரம்பமாகக் கருதப்படுவது, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவான 'விடுதலை இறையியல்'. விடுதலை இறையியலுக்கும், ஏழைகள் சார்பில் முடிவெடுத்தல் என்ற நிலைப்பாட்டிற்கும் அடித்தளமாக அமைந்தது, 'இறுதித் தீர்ப்பு உவமை' என்று சொல்வது மிகையல்ல. இந்த நிலைப்பாட்டின்படி வாழ்ந்து காட்டிய ஓர் இயேசு சபை அருள்பணியாளர், ருத்திலியோ கிராந்தே (Rutilio Grande) அவர்கள்.

அருள்பணி கிராந்தே அவர்கள், ஏழைகள் மீது காட்டிய ஈடுபாட்டைக் கண்டு, பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களும் ஈர்க்கப் பெற்றார். அவ்வேளையில், அருள்பணி கிராந்தே அவர்கள், செல்வம் மிகுந்த முதலாளிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்டார். அந்த அநீதமான கொலை,  பேராயர் ரொமேரோ அவர்களை, ஏழைகள் சார்பில் போராடத் தூண்டியது. அந்தப் போராட்டத்தின் விளைவாக, பேராயர் ரோமெரோ அவர்கள், 1980ம் ஆண்டு, தன் உயிரைத் தியாகம் செய்தார். ஒரு முறை அவரிடம், 'ஏழைகள் சார்பில் முடிவெடுப்பது' என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அருளாளர் ரொமேரோ அவர்கள், ஓர் உருவகத்தைப் பயன்படுத்தி, இவ்வாறு விளக்கமளித்தார்:

"ஒரு கட்டடம் தீப்பற்றி எரிகிறது என்றும் அதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். கட்டடத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்பு, உங்களுக்குள் அவ்வப்போது எழுகிறது. அப்போது, அருகிலிருந்து யாரோ ஒருவர், உங்கள் அம்மாவும், சகோதரியும் கட்டடத்தின் உள்ளே இருக்கின்றனர் என்று சொல்கிறார். உங்கள் மனநிலை உடனடியாக, முழுமையாக மாறுகிறது. உங்கள் அம்மாவையும், சகோதரியையும் வெளியேக் கொணர்வதற்கு நீங்கள் முயற்சிகள் எடுக்கிறீர்கள். அந்த முயற்சி, உங்கள்மேல் தீக்காயங்களை உருவாக்கினாலும், அதிலிருந்து பின்வாங்க மறுக்கிறீர்கள். 'ஏழைகள் சார்பில் முடிவெடுப்பது' என்பது இதுதான். வறுமை என்ற நெருப்பை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது ஒன்று, அந்த நெருப்புக்குள் கிறிஸ்து சிக்கியிருக்கிறார் என்று எண்ணி, செயல்களில் இறங்குவது வேறு."

தேவைகள் என்ற நெருப்பில் தினம், தினம் தீக்கிரையாகும் மனிதருக்கு உதவிகள் செய்வதற்கு, கடந்த வாரம் சிறப்பித்த வறியோரின் உலக நாள் நமக்கொரு வாய்ப்பை வழங்கியது.

இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித் தீர்வை நேரத்தில், கிறிஸ்து அரசருக்கு முன் நாம் நிற்கும் வேளையில், அரசர் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம் கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு, உனக்கு வழங்கப்பட்டச் செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை, உரிமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள வறியோருக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே, இறைவனாக, அரசனாக, நம் முன் தோன்றும் இயேசு கேட்கும் கேள்வி. அவருக்கு நாம் வழங்கப்போகும் பதில்கள், இன்று முதல் செயல்வடிவம் பெறட்டும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.