2017-11-25 15:37:00

சீனாயிலுள்ள மசூதி தாக்கப்பட்டதற்கு திருத்தந்தை கண்டனம்


நவ.25,2017. எகிப்து நாட்டின் வட சீனாய்ப் பகுதியிலுள்ள Al Roda மசூதியில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல், மிகுந்த வேதனயளிக்கின்றது எனவும், இதில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு தனது ஒருமைப்பாட்டுணர்வையும், ஆறுதலையும், செபங்களையும் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சுன்னி இஸ்லாமியப் பிரிவினரின் இம்மசூதியில், இவ்வெள்ளியன்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, குண்டுகளை வெடித்தும், பக்தர்கள் மீது நச்சு மருந்துகளைத் தெளித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 300க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

செபம் செய்துகொண்டிருந்த அப்பாவி மக்கள்மீது, அறிவற்றதனமாய் நடத்தப்பட்டுள்ள இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராய், மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவிப்பதாகவும், காழ்ப்புணர்வால் கடினப்பட்டுள்ள இதயங்கள், இத்தகைய பெரும் துன்பங்களை வருவிக்கின்ற வன்முறைப் பாதையைப் புறக்கணித்து, அமைதியின் பாதையைத் தழுவிக்கொள்ள, நல்மனம் கொண்டவர்களுடன் இணைந்து செபிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, எகிப்துக்கு அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

கடந்த ஆண்டில், பயங்கரவாதிகள், கெய்ரோவிலும், ஏனைய நகரங்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களைக் குண்டு வைத்து தாக்கியுள்ளனர். இதில், பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இவ்வாண்டில், ஏழு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்கள், சீனாய்ப் பகுதியைவிட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், இப்பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்கள் நினைவாக, எகிப்தில் மூன்று நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.