2017-11-25 15:14:00

திருத்தந்தை : உங்களைச் சந்திப்பதற்கு மிகுந்த ஆவலுடன் உள்ளேன்


நவ.25,2017. “மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளைப் பார்வையிடுவதற்கு தயாரித்து வருகின்ற இவ்வேளையில், அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்தும், நட்பும் நிறைந்த செய்தியை நான் அனுப்ப விரும்புகிறேன். நான் உங்களைச் சந்திப்பதற்கு மிகுந்த ஆவலுடன் உள்ளேன்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டரில் எழுதியுள்ளார்.

நவம்பர் 26, இஞ்ஞாயிறு, உரோம் நேரம் இரவு 9.40 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, மியான்மார் தலைநகர் யாங்கூனுக்குப் புறப்படும் திருத்தந்தை, நவம்பர் 27, திங்கள் பகல் 1.30 மணிக்கு யாங்கூன் சென்றடைவார். அங்கு அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெறும் திருத்தந்தை, நவம்பர் 28,29, 30 ஆகிய நாள்களில் அந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார்.

நவம்பர் 30ம் தேதி வியாழன் காலை 10.15 மணிக்கு யாங்கூனில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அன்று நண்பகல் 12.45 மணியளவில் பங்களாதேஷ் நாட்டின் டாக்காவுக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 30ம் தேதி மாலை 3 மணியளவில் டாக்கா சென்றடையும் திருத்தந்தை, அந்நகரில், டிசம்பர் 2ம் தேதி வரை பயண நிகழ்வுகளை நிறைவேற்றிய பின்னர், அன்று மாலை 5.05 மணிக்கு டாக்காவிலிருந்து புறப்பட்டு, அன்று இரவு 11 மணியளவில் உரோம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

மியான்மார் மற்றும், பங்களாதேஷ் நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அவரின் 21வது வெளிநாட்டுப் பயணமாகவும், மூன்றாவது ஆசியப் பயணமாகவும் அமைகின்றது. 2015ம் ஆண்டு சனவரியில், இலங்கை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கும், 2014ம் ஆண்டு ஆகஸ்டில், தென் கொரியாவுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.