2017-11-25 15:03:00

புதிய திருமண விதிமுறைகளின் நோக்கம் பற்றி திருத்தந்தை


நவ.25,2017. திருமண முறிவு குறித்த திருஅவையின் நடைமுறைகளில், தல ஆயருக்கு இருக்கும் சிறப்பான பங்கு பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று எடுத்துரைத்தார்.

ரோமன் ரோட்டா எனப்படும் திருஅவையின் உச்ச நீதிமன்றம் நடத்திய பயிற்சியில் கலந்துகொண்ட அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருமணம் குறித்த புதிய விதிமுறைகள் மற்றும் Super Rato விதிமுறைகள் பற்றி விளக்கினார்.

Mitis Iudex Dominus Iesus, Mitis et misericors Iesus ஆகிய, அவரின் சொந்த விருப்பத்தின் பேரிலான இரு அறிக்கைகளின் சில அடிப்படைக் கூறுகள் பற்றி, குறிப்பாக, மறைமாவட்ட ஆயரின் பங்கு குறித்து விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை.

திருமணங்களைச் செல்லாததாக ஆக்கும் நடைமுறைகளைக் குறைக்கும் புதிய விதிமுறையில், மறைமாவட்ட ஆயர் நீதிபதியாக உள்ளார் என்றும், இந்த நடைமுறையைக் குறைப்பது, ஆயராகத் தேர்ந்துகொள்வது அல்ல, மாறாக, இது, ஆயரின் திருப்பொழிவு மற்றும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணியிலிருந்து வருகின்ற கடமையாகும் என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்த விதிமுறைகளைக் குறைக்கும் பல்வேறு கூறுகளில், இரக்கமும், தேவையில் இருக்கும் ஏழைகளுக்கு, நெருக்கமாக இருத்தலும், இலவசமாக வழங்குவதும் முதலிடம் பெற வேண்டும் என்றும், இதையே திருஅவை எல்லாவற்றிற்கும் மேலாக அன்புகூர வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

திருஅவையின் நீதிக்காகக் காத்திருக்கும் விசுவாசிகளின் துன்பங்கள் மற்றும் தனிமைகள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நேரங்களில் அருள்பணியாளர்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, அவர்கள் தங்கள் மனச்சாட்சியில் மீண்டும் அமைதியை அனுபவிக்கத் தேவையான உதவிகளையும், திருநற்கருணையில் மீண்டும் பங்குகொள்வது குறித்த இறைவனின் திட்டம் பற்றியும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.