2017-11-27 15:54:00

பங்களாதேஷ் நாட்டிற்கு, மூன்றாவது முறையாக ஒரு திருத்தந்தை


நவ.27,2017. வறியோரின் திருஅவையாக, வறியோருக்காக உழைக்கும் திருஅவையாக இருக்கும் பங்களாதேஷ் நாட்டிற்கு, மூன்றாவது முறையாக ஒரு திருத்தந்தை வருவதை எண்ணி, தங்கள் நாடு மகிழ்வில் நிறைந்துள்ளது என்று டாக்கா பேராயர், கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள், ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மார் நாட்டையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்து, கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், 'வறியோரின் திருஅவை' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையொன்றை வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano வெளியிட்டுள்ளது.

1970ம் ஆண்டு, டாக்கா விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் செலவழித்த திருத்தந்தை அருளாளர் 6ம் பால், மற்றும் 1986ம் ஆண்டு, ஒருநாள் பயணமாக சென்ற திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் ஆகிய இருவரையும் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டிற்கு வருகை தரும் மூன்றாவது திருத்தந்தை என்று கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், குறிப்பிட்டுள்ளார்.

1518ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் வணிகர்கள் வழியே தங்கள் நாட்டிற்கு கிறிஸ்தவம் கொணரப்பட்டதை அடுத்து, 2018ம் ஆண்டு கொண்டாடப்படவிருக்கும் 5வது நூற்றாண்டு நிகழ்வுகளை, திருத்தந்தையின் பயணம் துவக்கி வைக்கும் என்று கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் நாட்டின் புள்ளிவிவரங்களையும், கிறிஸ்தவம் வேரூன்றிய வரலாற்றையும் தன் கட்டுரையில் குறிப்பிடும் கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், கத்தோலிக்கர்கள், பங்களாதேஷ் நாட்டில், சிறுபான்மை சமூகத்தினர் என்றாலும், இந்நாட்டில் காணப்படும் இறையழைத்தல் ஊக்கமூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.