2017-11-27 15:25:00

பாசமுள்ள பார்வையில்.. பாட்டியின் பலன் கருதாத தொண்டு


ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கடற்கரையில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் கடலில் நீராடியும், மணல் வீடு கட்டியும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது தூரத்தில் வயது முதிர்ந்த ஒரு பாட்டி காணப்பட்டார். அவரது சேலை அழுக்காகவும், அங்கங்கே கிழிந்தும் இருந்தன. அந்தப் பாட்டி, கடற்கரையில் நடக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல், எதையோ முணுமுணுத்துக்கொண்டே, கரையில் ஏதோ பொறுக்கித் தன் பையில் போட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பாட்டியின் அருகில் குழந்தைகள் செல்வதைப் பார்த்த பெற்றோர், அவர்களைத் தங்களிடம் அழைத்து, அந்தக் கிழவியிடம் செல்லாதீர்கள் என்று எச்சரித்தனர். அந்தப் பாட்டியோ, குனிந்து பொறுக்கும்போதெல்லாம் அவ்வப்போது, அந்தக் குடும்பத்தைப் பார்த்து புன்னகை செய்தார். அதை அக்குடும்பத்தினர் ஏற்கவுமில்லை, பதிலுக்குப் புன்னகை புரியவுமில்லை. இது நடந்து பல வாரங்கள் சென்று, அந்தப் பாட்டி பற்றிய ஓர் உண்மையை அக்குடும்பத்தினர் அறிந்தனர். அந்தப் பாட்டி, கடற்கரையில் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்கி, அதனால் குழந்தைகளின் பாதங்களுக்குத் துன்பம் நேராதபடி பாதுகாப்பதற்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதை அறிந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.