2017-11-27 15:39:00

மியான்மார் திருத்தூதுப்பயணம், ஒரு முன்தூது


நவ.27,2017. மியான்மார் நாடு, மேற்கில், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளையும், கிழக்கில் தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளையும், வடக்கிலும், வடகிழக்கிலும் சீனாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தெற்கில், வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில், 1,930 கிலோ மீட்டர் கடற்கரையையும் எல்லையாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கடற்கரை, அந்நாட்டின் சுற்றளவில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியாகும். மியான்மார் நாடு, 1997ம் ஆண்டிலிருந்து, ஆசியான் (ASEAN) எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளது. இதன் தற்போதைய தலைநகரம் NayPyiTaw. இதற்கு அரசர்களின் நகரம் என்று அர்த்தம். இந்நாட்டில் 130க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளனர். இக்குழுக்களில் ‘பமார்’ (Bamar) என்ற பெரிய இனக் குழுவின் பெயரே இந்நாட்டுக்குச் சூட்டப்பட்டுள்ளது. பர்மா, மியான்மார் ஆகிய இரு பெயர்களுமே இந்த இனப் பெயரிலிருந்து வருபவை. ஏறத்தாழ கி.மு.11 ஆயிரம் ஆண்டிலே, கற்கால கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள், மியான்மார் பகுதியில் வாழ்ந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. உலோக காலம் தொடங்கிய ஏறத்தாழ கி.மு.1500ம் ஆண்டிலே, இம்மக்கள், நெல் விவசாயம் செய்துள்ளனர், ஆடு மற்றும் பன்றிகளை வளர்த்துள்ளனர். உலகில் இந்த வேலையைச் செய்த முதல் மனிதர்கள் இவர்கள் எனவும் சொல்லப்படுகின்றது. கி.மு.500க்கும், கி.பி. 200க்கும் இடைப்பட்ட காலத்தில், இவர்கள் சீனாவுடன் நெல் வர்த்தகம் செய்துள்ளனர். மேலும், இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் கலாச்சாரத் தாக்கங்களும் இம்மக்களில் காணப்படுகின்றன. ஏறத்தாழ கி.மு.2ம் நூற்றாண்டிலேயே, இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த இந்நாட்டினர், புத்தமதத்தையும் தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றனர். தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் வல்லமை படைத்திருந்த இரு பேரரசுகளில் ஒன்றான Pagan பேரரசர்கள், தலைநகரில் மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட புத்த பகோடாக்களை அமைத்தனர். இன்று மியான்மாரில், 89.1 விழுக்காட்டினர் புத்த மதத்தினர்.

மியான்மாரில், 16ம் நூற்றாண்டுவரை, Pagan பேரரசு நிலைத்திருந்தது. பின்னர் போர்த்துக்கீசியர் ஆதிக்கம் தொடங்கியது, அதன் பின்னர், ஆங்கிலேயருக்கும், மியான்மார் நாட்டினருக்கும் இடையே நடந்த போர்களினால், மியான்மார் பிரித்தானிய - இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறியது. 1937ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளன்று, மியான்மார் மாநிலத்தின் முதல் பிரதமராக Ba Maw பதவியேற்றார். இவர் மியான்மாரின் தன்னாட்சிக்கு வெளிப்படையாகக் குரல் கொடுத்தார். இரண்டாம் உலகப்போர் ஆரம்பமான சமயத்தில், மியான்மார் அதில் ஈடுபடுவதை எதிர்த்து, தன் பதவியிலிருந்து விலகினார். இதனால் இவர் கைது செய்யப்பட்டார். இப்போரில், மியான்மார் தேசிய இராணுவமும், அரக்கான் இராணுவமும், ஜப்பானுக்கு ஆதரவாகப் போரிட்டது. மியான்மார் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பமார் இனத் தலைவரான ஆங் சான் என்பவர், பல்வேறு இனத் தலைவர்களுடன் உரையாடல் நடத்தி, மியான்மாரின் விடுதலைக்காகப் போராடுவதற்கு உறுதியளித்தார். 1947ம் ஆண்டில், ஆங் சான் அவர்கள், அவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும், அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக, இவரும், அந்த அவையின் பல உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டனர். இறுதியில் 1948ம் ஆண்டு சனவரி 4ம் நாள், பர்மா, தனி நாடாக விடுதலையடைந்தது. பர்மா என்ற பெயர், அந்நாட்டை ஆட்சி செய்த இராணுவத்தால், 1989ம் ஆண்டில், மியான்மார் என்று மாற்றப்பட்டது. மியான்மாரின் விடுதலைப் போரில் புத்தமத துறவிகள் முன்னணி வகுத்தனர். பர்மாவில் பிரித்தானிய காலனி ஆதிக்கம் 1824ம் ஆண்டு முதல், 1948ம் ஆண்டுவரை நீடித்தது.  

மியான்மாரின் திறமையற்ற அரசு, அந்நாட்டின் பெரிய பமார் இனங்கள் அல்லாத மற்ற இனத்தவரின் போராட்டங்கள் ஆகியவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி, அந்நாட்டு இராணுவம், ஆட்சிக் கவிழ்ப்பின் வழியாக, 1962ம் ஆண்டு மார்ச் 2ம் நாளன்று, ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டின் வர்த்தகம், தொழில், ஊடகம், உற்பத்திகள், பள்ளிகள் போன்ற அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு, இராணுவ அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. மியான்மார் குடியுரிமை பெறாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இராணுவ ஆட்சியை எதிர்த்து, தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1975, 1976, 1977 ஆகிய ஆண்டுகளில் நடந்த மாணவர் போராட்டங்கள் உடனடியாக அடக்கப்பட்டன. 1988ம் ஆண்டுவரை ஒற்றை ஆட்சிமுறையே நிலவியது. இக்காலத்தில், மியான்மார், உலகின் மிகவும் வறிய நாடாக மாறியது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர்,1990ம் ஆண்டு மே மாதத்தில், முதல் முறையாத சுதந்திரத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில், ஆங் சான் சூச்சி அவர்களின் தேசிய சனநாயக கட்சி, 492 இடங்களில், 392 இடங்களைப் பெற்று வெற்றியடைந்தது. ஆயினும், இராணுவ அதிகாரிகள் இம்முடிவை ஏற்க மறுத்தனர். ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 2010ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்தலின் பயனாக, 2011ம் ஆண்டில், இராணுவம் ஆட்சியை, சனநாயக அரசிடம்  ஒப்படைத்தது. 2015ம் ஆண்டில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சி தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி நடத்தி வருகிறது.

மியான்மார் நாடு, வற்றாத நதிகளையும், மலைகளையும், இயற்கை மற்றும் கனிம வளங்களையும் கொண்டிருக்கும் ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில், புத்த மதத்தினர் 89.1 விழுக்காட்டினர், கிறிஸ்தவர்கள் 6.3 விழுக்காட்டினர், முஸ்லிம்கள் 2.3 விழுக்காட்டினர், இந்துக்கள் 0.5 விழுக்காட்டினர் மற்றும், இயற்கையை வழிபடுபவர்கள் 0.8 விழுக்காட்டினர். இந்நாட்டில் 130க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்களைச் சேர்ந்த பலர், அந்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, முகாம்களில், வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ராக்கைன் (Rakhine) மாநிலத்தில் வாழ்கின்ற ரொங்கிங்கியா இன முஸ்லிம்கள் பிரச்சனை அண்மைக் காலமாக உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்மாநிலத்தில், இந்த இன புரட்சியாளர்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடந்துவரும் மோதல்களால், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து, 6 இலட்சத்து 23 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரொங்கிங்கியா முஸ்லிம்கள், தங்கள் குடியிருப்புக்களை விட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர். எனவே, இந்த உள்நாட்டுப் போர், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தால், அற்புதமாய் நிறுத்தப்படும் எனவும், நாட்டில் அமைதியும், ஒப்புரவும் நிலவும் எனவும், நல்லதோர் எதிர்காலம் அமையும் எனவும் மக்கள் மிகவும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

மியான்மாரில் சிறுபான்மை கத்தோலிக்கரை விசுவாசத்திலும், நற்செய்திக்குச் சான்று பகரும் வாழ்விலும் உறுதிப்படுத்த இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். பெரும்பான்மையான கத்தோலிக்கரைக் கொண்டுள்ள கச்சின் மாநிலத்திலிருந்து,  ஏறக்குறைய 200 பேர் மூன்று பகலும், இரண்டு இரவும் பயணம் செய்து, யாங்கூன் வந்துள்ளனர். திருத்தந்தையைப் பார்ப்பது, இயேசுவைப் பார்ப்பது போலாகும், இது ஓர் ஆசீர்வாதமாகும், நாங்கள் இனிமேல் மகிழ்வாக இறப்போம் என்று, இவர்கள், ஊடகங்களிடம் கூறியுள்ளனர். நீண்டகாலமாக, இராணுவ அடக்குமுறையில் பலவிதங்களில் துன்புற்றுள்ள மியான்மார் மக்களுக்கு, திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், அமைதி, ஒப்புரவு மற்றும் நல்லதோர் எதிர்காலத்தைக் கொண்டுவரும் என்று நம்புவோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள் பற்றி, மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி ஜெயா அவர்கள், மியான்மாரிலிருந்து கூறுவதையும் கேட்போம். மியான்மாரிலே பிறந்து வளர்ந்தவர் சகோதரி ஜெயா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.