2017-11-28 12:32:00

யாங்கூன் பல்சமயத் தலைவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.28,2017. அன்பு சகோதரர்களே, நீங்கள் என்னைக் காண வந்ததற்காக நன்றி கூறுகிறேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் வந்து சந்தித்திருக்கவேண்டும். ஆனால், நீங்கள், தாராள மனதோடு, என் வேலையைக் குறைத்துவிட்டீர்கள். நன்றி.

உங்களை இவ்விதம் காணும்போது, "சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று! எத்துணை இனியது!" என்ற திருப்பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

ஒன்றுபட்டிருப்பது என்றால், சீராக, ஒரே மாதிரி இருப்பது அல்ல. நாம் அனைவரும் வேறுபட்ட மதநம்பிக்கை கொண்டவர்கள். ஒவ்வொரு மதமும் அதன் பாரம்பரியம், செல்வம் அனைத்தையும் கொண்டது. வேறுபாடுகள் கொண்ட நாம் ஒன்றுபட்டிருப்பதே, உன்னதமானது. இங்கு நாம் 'நல்லிணக்கம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். நல்லிணக்கமாக வாழ்வதே, அமைதியை உருவாக்கும்.

இன்றைய உலகம் அனைவரையும் ஒரே வழியில் சிநிதிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. இது ஒருவகை காலனிய ஆதிக்கம். இது, மனிதத்தைக் கொன்றுவிடும்.

நமது வேறுபாடுகளைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. வேறுபாடுகள் நடுவிலும் நாம் உடன்பிறந்தோராக ஒப்புரவுடன் வாழமுடியும். அதுவே, உண்மையான அமைதியைக் கொணரும் என்று நம்புகிறேன்.

கலாச்சார வேறுபாடுகளை அழித்து, காலனிய ஆதிக்க உணர்வுடன், அனைத்தையும் சமமாக்கிவிடாமல், அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள உங்களுக்கு நன்றி. நமது வேறுபாடுகளே, நம் அமைதியின் செல்வம்.

"ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள்மேல் ஒளிரச் செய்து உங்கள்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள் பக்கம் திருப்பி உங்களுக்கு அமைதி அருள்வாராக!"

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.