2017-11-29 15:13:00

திருத்தந்தையின் 21வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்


நவ.29,2017. நவம்பர் 26, இஞ்ஞாயிறு உரோம் நேரம் இரவு 10.10 மணிக்கு, மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான, தனது 21வது  வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்களன்று, மியான்மார் நாட்டின் முன்னாள் தலைநகர் யாங்கூன் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அந்நாட்டினர் சிறப்பான வரவேற்பை அளித்து, அவரது இருப்பில் மகிழ்ந்து வருகின்றனர். நவம்பர் 28, இச்செவ்வாயன்று, மியான்மாரின் புதிய தலைநகர் Nay Pyi Daw சென்று, அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவர், நாட்டின் ஆலோசகர் ஆங் சான் சூச்சி ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்தார் திருத்தந்தை. பின்னர், அந்நகரின் பன்னாட்டு கருத்தரங்கு மையத்தில், அரசு, மற்றும் தூதரக அதிகாரிகள், பொது மக்கள் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை. இந்த உரை, உலக அளவில் மிகவும் கவனமுடன் நோக்கப்பட்டது. ஏனென்றால், மியான்மார் நாடு எதிர்கொள்ளும், ரொங்கிங்கியா முஸ்லிம் இன மக்கள் பற்றி திருத்தந்தை பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருத்தந்தை, இவ்வுரையில் ரொங்கிங்கியா என்ற சொல்லாடலை உச்சரிக்காமல், சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நீதிக்கு அழைப்பு விடுத்தார். ரொங்கிங்கியா பற்றி திருத்தந்தை பேசாதது குறித்து, மனித உரிமை குழுக்கள், பன்னாட்டு ஊடகங்கள் போன்றவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆனால் மியான்மார் மக்கள், இப்பிரச்சனை பற்றி கண்டுகொள்ளாமல், திருத்தந்தையின் இருப்பில் மகிழ்ந்து இருக்கின்றனர், யாங்கூனிலிருந்து எம் நிருபர், இயேசு சபை அருள்பணி சி.அமல் சொல்கிறார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.