2017-11-29 15:37:00

புத்த தலைமைப்பீட துறவியர் அவை, ஆயர்கள் சந்திப்பு


நவ.29,2017. இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 4.15 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் மாலை 3.15 மணிக்கு, யாங்கூன் Kaba Aye மையம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். தேரவாடா புத்தமதப் பிரிவின் அடையாளமாக உள்ள இந்த மையத்தில், உலக அமைதியின் பகோடா எனப் பொருள்படும், Kaba Aye paya பகோடா அமைந்துள்ளது. 1952ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பகோடா, தென்கிழக்கு ஆசியாவில் பக்தர்கள் மிக அதிகமாகச் செல்லும் பகோடாக்களில் இதுவும் ஒன்றாகும். Kaba Aye மையத்தில் புத்த தலைமைப்பீட துறவியர் அவை உறுப்பினர்களைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். ‘Sangha’ எனப்படும் இந்த அவையின் தலைவர், வணக்கத்துக்குரிய Bhaddanta Kumarabhivamsa அவர்கள் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அதன்பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். இச்சந்திப்பில் பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. மியான்மாரில், ஏறத்தாழ ஐந்து இலட்சம் புத்த மதத் துறவிகள் உள்ளனர். அதோடு, அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட பெண் புத்த மதத் துறவிகளும் உள்ளனர். புதன் மாலை 5 மணியளவில் இச்சந்திப்பை நிறைவு செய்து, அங்கிருந்து 9.6 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள யாங்கூன் பேராயர் இல்லம் சென்றார் திருத்தந்தை. அவ்வில்லத்தில் மியான்மார் ஆயர்களையும் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். 22 ஆயர்கள் இதில் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில், மியான்மார் நாட்டிற்கான 16 புதிய ஆலயங்கள், ஒரு பெரிய குருத்துவ கல்லூரி, புதிய திருப்பீடத் தூதரகம் ஆகியவற்றிக்கான அடிக்கல்களையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இத்திருத்தூப் பயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் முற்றுப்பெற்றன. ஏறத்தாழ 90 விழுக்காட்டு புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மார் நாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புத்த மதத்தினரும், கத்தோலிக்கரும் ஒன்றிணைந்து, குணப்படுத்தும் பாதையில், ஒவ்வொரு மனிதரின்  நலனுக்காக உழைப்பார்களாக என்று குரல் கொடுத்துள்ளார். நாட்டில் அமைதியும், அன்பும் நிலவுவதாக. கிறிஸ்துவின் அன்பு, ஆன்மீகப் பயணத்தின் வழிகாட்டிகள் போன்றவை. இவை, கடவுள் மற்றும் நம் அயலவர் இதயங்களை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன என்ற சொற்களையும், இப்புதனன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.