2017-11-29 13:52:00

மியான்மார் ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


நவ.29,2017. அன்பு சகோதர ஆயர்களே, இன்று முழுவதும் நாம் அடைந்துள்ள நன்மைகளுக்கு இச்சந்திப்பு நேரத்தில் நன்றி கூறவும், இணைந்து சிந்திக்கவும் வந்திருக்கிறோம். குணமாக்குவது, உடன் நடப்பது, இறைவாக்குரைப்பது என்ற மூன்று சொற்களை மையப்படுத்தி, என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில், குணமாக்குவது. நாம் அறிக்கையிடும் நற்செய்தி, அனைத்திற்கும் மேலாக, குணமாக்கும் நற்செய்தி. கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் வழியே, இறைவன் இவ்வுலகை தம்மோடு ஒப்புரவாக்கியுள்ளார். குணமாக்குவது என்ற செய்தி, மியான்மார் நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று.

ஆயருக்குரிய உங்கள் பணியில், குணமாக்குவது, ஒருங்கிணைப்பது ஆகியவற்றிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில், இறைவனின் வழி நடத்துதலை உணர்வீர்களாக!

மியான்மாரில் வாழும் கத்தோலிக்கச் சமுதாயம், இறையன்பு, அயலவர் அன்பு என்ற இரண்டிலும் காட்டிவரும் சாட்சியம் பெருமைக்குரியது. இத்தகையைச் சாட்சியத்தை வழங்கும் அனைவருக்கும் நான் கூறும் நன்றியைத் தெரிவியுங்கள்.

குணமாக்கும் பணியில் பல்சமய கூட்டுறவு முயற்சிகள் அவசியம். பல்சமய உரையாடல், ஒப்புரவு ஆகிய முயற்சிகளில் பாலங்களை உருவாக்கும் உங்கள் பணியைத் தொடருங்கள். யாங்கூனில் நீங்கள் நடத்திய பல்சமய அமைதிக் கருத்தரங்கு சக்திவாய்ந்த சாட்சியாக விளங்குகிறது.

உங்களுக்கு நான் சொல்லவிழையும் இரண்டாவது சொல், உடன் நடப்பது. ஆயர் என்ற முறையில், நீங்கள், ஆடுகளின் நறுமணத்தை உணரவும், விளிம்பில் இருப்போரைத் தேடிச்செல்லவும் வேண்டும். உங்களுடன் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் உடன் நடப்பது முக்கியம்.

இறைவன் அருளால், மியான்மார் தலத்திருஅவை, உறுதியான நம்பிக்கையின்மேல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்நாட்டு கலாச்சார மதிப்பீடுகளுடன் நற்செய்தியை தகுந்த முறையில் இணைப்பது அவசியம்.

இந்நாட்டின் இளையோருடன் உடன் நடப்பது, அனைத்தையும்விட முக்கியமானப் பணி. அடுத்த ஆண்டு வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம், இளையோரை மையப்படுத்தியது என்பதை உணர்ந்து, அவர்களுடன் நீங்கள் பயணிப்பது மிகவும் முக்கியம். மியான்மார் நாடு, இளையோரை, அதிக எண்ணிக்கையில் கொண்டிருப்பதும், அருள்பணியாளராக, துறவியராக, பணியாற்றும் ஆர்வம், இளையோரிடையே பெருகியிருப்பதும், இறைவன் வழங்கியுள்ள ஆசீர்.

என்னுடைய மூன்றாவது சொல், இறைவாக்குரைப்பது. மியான்மார் கத்தோலிக்க சமுதாயம், இந்நாட்டில் ஆற்றிவரும் கல்விப்பணி, நலப்பணி ஆகியவற்றின் வழியே, நற்செய்திக்கு சாட்சியமாகத் திகழ்கிறது. அனைவருக்கும் சம உரிமை, மாண்பு ஆகியவற்றை வலியுறுத்தவும், குறிப்பாக, வறியோர் சார்பில் குரல் கொடுக்கவும் தலத்திருஅவை அழைப்பு பெற்றுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, அடுத்தத் தலைமுறையினரை மனதில் கொண்டு, இயற்கை வளங்களைத் தகுதியான முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றிலும் தலத்திருஅவை பணியாற்றவேண்டும்.

அன்பு சகோதர ஆயர்களே, நீங்களும், உங்கள் பொறுப்பில் பணியாற்றும் அருள்பணியாளர்களும் அதிக வெப்பமானச் சூழலில் பணியாற்றுகிறீர்கள். உங்கள் உடல், மற்றும் ஆன்ம நலனில் தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள். அதேவண்ணம், இந்நாட்டின் கடினமானச் சூழல்களில் பணியாற்றும் அருள்பணியாளர், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள் அனைவர் மீதும் தந்தைக்குரிய பாசத்தை வெளிப்படுத்துங்கள்.

இறைவனின் ஆசீர் உங்கள் அனைவர்மீதும் தங்குவதாக! எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.