2017-11-29 15:23:00

யாங்கூன் Kyaikkasan திடலில் திருத்தந்தை திருப்பலி


நவ.29,2017. திருத்தந்தையின் இந்த திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாளாகிய, நவம்பர் 29, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 7.45 மணிக்கு தன் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், தான் தங்கியிருக்கும் யாங்கூன் பேராயர் இல்லத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Kyaikkasan திடலில் திருப்பலி நிறைவேற்றச் சென்றார், திருத்தந்தை. யாங்கூன் நகரின் மையப் பகுதியில், ஏறத்தாழ அறுபது ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ள இந்தத் திடல், பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில், யாங்கூன் குதிரைப் பந்தயத் திடலாக கட்டப்பட்டது. இவ்விடம், அந்நாட்டு வரலாற்றில் துன்பங்கள் அரங்கேறிய இடமாகவும் ஒரு கட்டத்தில் அமைந்திருந்தது. மியான்மாரில் 1962ம் ஆண்டில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில், ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், இந்தத் திடலை தற்காலிக தடுப்புக்காவல் மையமாகப் பயன்படுத்தியது. மியான்மாரின் மிகப் புகழ்பெற்ற அரசியல் தூதரும், முன்னாள் ஐ.நா.பொதுச் செயலாளருமான U Thant அவர்கள் இறந்தபோது, அவரின் உடல், இந்தத் திடலில், சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்தது. உலக அளவில் மிகவும் மதிக்கப்பட்ட தங்கள் அரசியல் தலைவரான U Thant அவர்களுக்கு, இறுதி மரியாதை செலுத்துவதற்கு இராணுவம் மறுத்ததால், அதை எதிர்த்து மாணவர்கள், அவரின் உடலைக் கைப்பற்றுவதற்குமுன் இது நடந்தது. Kyaikkasan திடலில் திருப்பலி நிறைவேற்றச் சென்ற திருத்தந்தை, அங்கு காலை 4 மணியிலிருந்தே கூடியிருந்த ஏறத்தாழ 2 இலட்சம் மக்கள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து திருப்பலியை ஆரம்பித்தார். இத்திருப்பலி, இலத்தீன், ஆங்கிலம் மற்றும் பர்மீய மொழியில் நிறைவேற்றப்பட்டது. மியான்மாரில் 130க்கும் மேற்பட்ட இனத்தவர் வாழ்கின்றவேளை, இத்திருப்பலியில், ஷான், சின், தமிழ், கரேன், கச்சின், கயான் ஆகிய மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு செபங்கள் மன்றாடப்பட்டன. இத்திருப்பலி உட்பட, இத்திருத்தூதுப் பயணத் தயாரிப்பில், மியான்மார் தமிழர்களின் மனத்தாராளம் நிறைந்த பங்களிப்பு எல்லாராலும் பாராட்டப்பட்டது என்று சொல்கிறார், யாங்கூன் எம் நிருபர் இயேசு சபை அருள்பணி சி.அமல்

ஐந்து கோடியே 17 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற மியான்மாரில்,  கத்தோலிக்கர் ஆறு இலட்சத்திற்குச் சற்று அதிகம். இந்தச் சிறுபான்மை சமூகத்திற்குத் திருத்தந்தை மறையுரை ஒன்றும் ஆற்றினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை இத்தாலிய மொழியில் ஆற்ற, உடனுக்குடன் பர்மிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இத்திருப்பலியில், இறுதி ஆசீருக்குமுன்னர், யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் போ அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். இத்திருப்பலியே, மியான்மார் நாட்டு திருத்தூதுப் பயணத்திற்கு முத்தாய்ப்பாய் விளங்கியது. மியான்மார் வரலாற்றில், இத்திருப்பலி மிகப்பெரிய நிகழ்வாகும்.  கத்தோலிக்கர் நாட்டின் வெகு தொலைவிலிருந்தெல்லாம், மலைப்பகுதிகளிலிருந்தும், பல நாள்கள் நடந்தும், இரயிலிலும், பேருந்திலும், கடினப் பயணம் மேற்கொண்டு இத்திருப்பலியில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இத்திருப்பலி பற்றி, யாங்கூனிலிருந்து எம் நிருபர், இயேசு சபை அருள்பணி சி.அமல் அவர்கள் பகிர்ந்து கொண்டிருப்பதைக் கேட்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.