சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

பங்களாதேஷ் அரசுத்தலைவர் மாளிகையில் அரசு அதிகாரிகளுக்கு உரை வழங்கும் திருத்தந்தை - REUTERS

30/11/2017 12:59

நவ.30,2017. மாண்புமிகு அரசுத்தலைவரே, அரசு அதிகாரிகளே, பெரியோரே, பெண்மணிகளே, என் முன்னோர்கள், திருத்தந்தை 6ம் பால், மற்றும் திருத்தந்தை 2ம் ஜான்பால் ஆகியோரைத் தொடர்ந்து, நான் இங்கு வந்துள்ளேன். கத்தோலிக்க சகோதர, சகோதரிகளுடன் செபிக்கவும், அவர்களுக்கு என் அன்பையும், ஊக்கத்தையும் வழங்கவும் வந்துள்ளேன்.

'தங்க வங்காளம்' என்றழைக்கப்படும் பங்களாதேஷ் நாட்டில், ஆறுகள், மற்றும், நீர்நிலைகளுடன் கூடிய இயற்கை வளங்கள் உள்ளன. பல மொழிகளையும், கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கும் நாடு இது.

இன்றைய உலகில் எந்த ஒரு சமுதாயமும், தனித்து வாழவோ, முன்னேறவோ இயலாது. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருப்பது அவசியம். இதை உணர்ந்த இந்நாட்டு முன்னோர், குறிப்பாக, இந்நாட்டின் முதல் அரசுத்தலைவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்கள், இந்த எண்ணத்தை, நாட்டு அரசியல் சட்டத்தில் இணைத்தார். யாரையும் ஒதுக்கிவிடாமல், ஒருங்கிணைத்து உரையாடலைக் கடைபிடிப்பது, இளமை நிறைந்த இந்நாட்டின் எதிர்காலத்தை உறுதி செய்யும்.

இரக்கைன் மாநிலத்திலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள மக்களை மனிதாபிமான உணர்வோடும், தாராள உள்ளத்தோடும் வரவேற்றுள்ளீர்கள். மிக அதிகமான துன்பங்களை அடைந்துள்ள இம்மக்கள், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இவ்வளவு அதிக அளவில் மக்கள் புலம்பெயர்ந்துள்ள இந்நிகழ்வுக்கு, உலக நாடுகள், தகுந்த தீர்வு காண முன்வர வேண்டும்.

கத்தோலிக்க சமுதாயத்தினரைச் சந்திப்பது, என் பயணத்தின் முதன்மையான நோக்கம் என்றாலும், ஏனைய மதத்தினரை நான் சந்திக்கவிருப்பதும் ஓர் உன்னத தருணமாக அமையும். ஒருவரையொருவர் உளமார மதிக்கும் சூழலில், உண்மையான உரையாடல் இடம்பெறுகிறது. இதுவே நீதியான, அமைதி நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவும்.

மதத்தைப் பயன்படுத்தி, பிரிவினை உணர்வுகளைத் தூண்டிவிடும் இன்றைய உலகில், ஒப்புரவும், ஒருங்கிணைக்கும் மனநிலையும் அதிகம் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு, இங்கு, டாக்காவில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டனம் செய்து எழுந்த குரல்கள், இந்தத் தேவையை வெளிப்படுத்துகிறது. மதத்தின் பெயரால் வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது என்று, பங்களாதேஷ் அரசும், இந்நாட்டு மதத்தலைவர்களும், அந்நிகழ்வையொட்டி கூறியது போற்றுதற்குரியது.

எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும், பங்களாதேஷில் வாழும் கத்தோலிக்கர்கள், கல்விக்கூடங்கள், மருத்துவ மனைகள் வழியே, இந்நாட்டினைக் கட்டியெழுப்புகின்றனர். தங்கள் மதத்தைப் பின்பற்றவும், பணிகளை ஆற்றவும் இந்நாட்டில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கத்தோலிக்க சமுதாயம் பாராட்டுகிறது. இந்நாட்டின் அரசியல் சட்டங்களில் வெளிப்படும் உன்னத விழுமியங்களின்படி, கத்தோலிக்கர் தங்கள் சுதந்திரத்தை தொடர்ந்து அனுபவிப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன்.

அமைதியையும், நல்லிணக்கத்தையும் வழங்கும் எல்லாம் வல்லவரின் ஆசீர், பங்களாதேஷ் நாட்டில் வாழும் அனைவர் மீதும் தங்குவதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

30/11/2017 12:59