2017-12-01 15:57:00

டாக்காவில் அமைதிக்கான பல்சமய கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வு


டிச.01,2017. ரிக்ஷா வண்டியில் திருத்தந்தை அமர, டாக்கா பேராயர் இல்லத்திருந்து, 80 மீட்டர் தூரத்திலுள்ள அவ்வில்லத்தின் தோட்டம் வரை, ஆயர்கள் அவ்வண்டியைத் தள்ளிக்கொண்டே சென்றனர். அத்தோட்டத்தில் பல்சமய மற்றும் அமைதிக்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வு நடைபெற்றது. நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பங்களாதேஷின் வளமையான கலாச்சாரம் மற்றும் பன்மைத்தன்மையைக் குறிக்கும் விதமாக நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. விவசாயிகள், பாம்பாட்டிகள், படகோட்டிகள், தேயிலைத்தோட்டப் பணியாளர்கள் போன்றோரைக் குறிக்கும் விதமாக, இந்நடனம் அமைந்திருந்தது. இந்நடனம் தவிர, ஒவ்வொரு மறைமாவட்டத்திலிருந்தும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. பங்களாதேஷின் ஏறத்தாழ 99 விழுக்காட்டினர், அந்நாட்டையும், ஏறத்தாழ 30 இலட்சம் பேர், 45 இனக் குழுக்களையும் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பல்சமய மற்றும் அமைதிக்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில், முதலில் கர்தினால் டி ரொசாரியோ அவர்கள் வரவேற்புரையாற்றினார். பின்னர், இஸ்லாம், இந்து, புத்த, கத்தோலிக்க மற்றும், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஐவர் திருத்தந்தையை வாழ்த்திப் பேசினர். நூறாயிரம் முஸ்லிம் குருக்கள் கையெழுத்திட்டுள்ள, பயங்கரவாதத்திற்கெதிரான கடிதம் ஒன்றையும், பங்களாதேஷின் Amber Shah Shahi Jami மசூதியின் உயர் தலைவர் Allamma Majharul Islam அவர்கள் திருத்தந்தையிடம் அளித்தார். அமைதிக்காக பாடல் ஒன்றும் பாடப்பட்டது. அதன்பின்னர் திருத்தந்தையின் உரையும் இடம்பெற்றது. சமய சுதந்திரம், மதத்தவரிடையே திறந்தமனம், ஒத்துழைப்பு, ஏற்றுக்கொள்தல் போன்றவற்றை வலியுறுத்தினார், திருத்தந்தை. ஆங்லிக்கன் ஆயர் ஒருவர்  கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம் சொல்ல, இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இத்திருத்தூதுப் பயணம் பற்றி ஆசியச் செய்தியிடம் பேசிய, பங்களாதேஷ் புத்தமதக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் Bhikkhu Sunandapriya அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாரும் உடன்பிறப்பு உணர்வில் வாழ்கின்ற அமைதியைப் போதிக்கிறார், திருத்தந்தையின் பிரசன்னத்தால் இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கின்றோம், நாங்கள் திருத்தந்தைக்கு நன்றி சொல்கின்றோம், அவரின் இப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம் என்று தெரிவித்துள்ளார். ஏறத்தாழ ஒரு விழுக்காட்டினரைக் கொண்ட இந்நாட்டில், ஆறாயிரம் புத்த துறவிகளும், பயிற்சி நிலையில் ஆறாயிரம் பேரும் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.