சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

குருக்கள், துறவியர் சந்திப்பில் திருத்தந்தை பகிர்ந்துகொண்டவை

குருக்கள், துறவியர் சந்திப்பில் திருத்தந்தை - REUTERS

02/12/2017 16:09

டிச.02,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, நீண்ட உரையாற்றி உங்களைச் சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. எனவே இந்த ஆலயத்தில் நுழைந்து, உங்கள் வாழ்த்துக்களைக் கேட்டபோது என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இஸ்ரயேல் வீட்டிலிருந்து ஒரு தளிர் கிளம்பும், அது ஞானமும் அறிவும் தரும் ஆவி என்ற இறைவாக்கினர் எசாயா பகுதி நினைவுக்கு வந்தது. நீங்கள், இறைவனின் சாட்சிகள். உங்கள் உள்ளத்திலுள்ள தூய ஆவியாரின் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்கள். உங்களில் ஒருவர் பகிர்ந்துகொண்டவேளையில் அழைப்பை எவ்வாறு தேர்ந்துதெளிவது என்று கேட்டார். செபத்தின் வழியாகத்தான் இதைச் செய்ய இயலும். அடுத்து, இறையாட்சி என்ற தோட்டத்தில் இலட்சக்கணக்கான செடிகள் நடப்பட்டுள்ளன. நாம் எல்லாருமே அச்செடிகள். குழுவாழ்வை அமைப்பது அவ்வளவு எளிதல்ல. நாம் எல்லாரும் பலவீனமுள்ள மனிதர்கள். பங்களாதேஷ் என்றாலே, பல்சமய உரையாடல் சூழல் இருக்கும் என்று கர்தினால் தவ்ரான் அவர்கள் சொன்னார். இதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இந்த உரையாடலை, நம் குழுக்களிலும், நம் கத்தோலிக்க சமூகத்திலும் ஆற்றுவோம். பங்களாதேஷ், நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும். இந்த நல்லிணக்கத்திற்கு ஏராளமான பகைவர்கள் உள்ளனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டுப் போதுமானது. இதை மீண்டும் மீண்டும் சொல்வதாக சிலர் என்னிடம் சொல்கின்றனர். ஆனால் எனக்கு இது அடிப்படையானது. ஒரு துறவுக் குழுமத்தில், ஆயர் பேரவையில், ஒரு குருத்துவக் கல்லூரியில், அருள்பணியாளர் இல்லத்தில், நல்லிணக்கத்திற்கு எதிராக அமைவது, புறங்கூறுதல். இது நான் கண்டுபிடித்தது அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் மற்றவரைப் பற்றி மோசமாகப் பேசுவது, குழுமத்தை அழிக்கின்றது. நம்பிக்கையற்ற சூழலை உருவாக்குகின்றது. இது ஒரு பயங்கரவாதம். எனவே தயவுகூர்ந்து நாவைக் கட்டுப்படுத்துங்கள். அடுத்து நான் சொல்ல விரும்புவது மகிழ்வான உணர்வில் வாழுங்கள் என்பதே. துன்பம் நிறைந்த சூழல்களிலும் மகிழ்வாக வாழுங்கள். எல்லா வயதினரும் மகிழ்வாக வாழுங்கள். உங்களுக்காக நான் செபிப்பதுபோல, எனக்காகவும் செபியுங்கள், வாழ்த்துக்கள்.

அருள்பணியாளர்கள், துறவியர், குருத்து மாணவர் ஆகியோரின் சாட்சியங்களைக் கேட்டதற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/12/2017 16:09