சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

டாக்கா நோத்ரு தாம் கல்லூரியில் இளையோர் சந்திப்பு

டாக்கா நோத்ரு தாம் கல்லூரியில் இளையோர் சந்திப்பு வேளையில் கலைநிகழ்ச்சி - AP

02/12/2017 16:01

டிச.02,2017. நவம்பர் 02, சனிக்கிழமை மாலை 3 மணிக்கு, டாக்கா, நோத்ரு தாம் கல்லூரியில் இளையோரைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இக்கல்லூரி, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபின், 1947ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு ஏறக்குறைய மூவாயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்த ஏழாயிரத்திற்கு மேற்பட்ட இளையோர் மத்தியில் திருத்தந்தையின் திறந்த வாகனம் வலம் வந்தது. இளையோரின் நடனத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில், பங்களாதேஷ் ஆயர் பேரவையின் உதவித் தலைவர், Rajshahi ஆயர் Gervas Rozario  அவர்கள் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பங்களாதேஷின் 16 கோடி மக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டோர் இளையோர். இவர்களில் ஏறத்தாழ நாற்பதாயிரம் பேர், ஒவ்வோர் ஆண்டும் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர். 11 கத்தோலிக்க கல்லூரிகளும், நோத்ரு தாம் பல்கலைக்கழகமும் உள்ளன. கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவரல்லாதவர்கள். ஏராளமான இளையோர் நல்லதோர் எதிர்காலம் பற்றிய தங்களின் கனவை நனவாக்குகின்றனர். இதற்கு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் உதவுகின்றன என்று ஆயர் உரையாற்றினார். ஆயரின் உரைக்குப் பின்னர், பாடல், அதன் பின்னர், Anthony Toranga Nokrek என்ற இளைஞரின் சாட்சியம், அதன் பின்னர் Upasana Ruth Gomes என்ற இளம்பெண்ணின் சாட்சியம், பின் நடனம், அதன்பின்னர் நடனம், பின்னர் திருத்தந்தையின் உரை என்று, இச்சந்திப்பு நடைபெற்றது. திருத்தந்தையின் உரைக்குப் பின், அமைதிக்கான பாடல் பாடப்பட்டது. கடைசியில் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ அவர்கள் நன்றியுரையாற்றினார். இளையோர் சந்திப்பை நிறைவுசெய்து, டாக்கா பன்னாட்டு விமான நிலையம் சென்று பிரியாவிடை சொல்லி, பங்களாதேஷ் நாட்டின் பிமான் விமானத்தில் உரோம் நகருக்குப் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது உள்ளூர் நேரம் மாலை 5 மணி 5 நிமிடமாகும். “அமைதி மற்றும் நல்லிணக்கம்” என்ற விருதுவாக்குடன் நடைபெற்ற பங்களாதேஷ் திருத்தூதுப் பயணம் இத்துடன் நிறைவுக்கு வந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/12/2017 16:01