2017-12-02 14:12:00

குருக்கள், துறவியருக்கு திருத்தந்தை தயாரித்திருந்த உரை


டிச.02,2017. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பேதுருவின் வழித்தோன்றல் என்ற முறையில், உங்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துவது என் கடமை. ஆனால், இங்கு நீங்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், என்னை நம்பிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

பங்களாதேஷில் உள்ள கத்தோலிக்க சமுதாயம், கடுகு விதையைப் போல சிறிதேயாயினும், இறைவன் தனக்கே உரிய காலத்தில் நல்ல பலன்களைத் தந்துள்ளார் என்பதையறிந்து மகிழ்கிறேன். தாராள மனதோடும், அயரா உழைப்போடும் இந்நாட்டில் பணியாற்றிய மறைப்பணியாளர்களைப்போல், தற்போது, உங்கள் நடுவே, பல மறைப்பணியாளர்களை நான் காண்கிறேன்.

நமது சந்திப்பு, புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நிகழ்வது, மிக்க நல்லது. நமது நம்பிக்கை, மற்றும், கிறிஸ்தவ வாழ்வின் மறையுண்மைகளைச் சிந்திக்க செபமாலை பெரும் உதவியாக உள்ளது. இறைவனின் செய்திக்கு செவிமடுக்க, மரியா காட்டிய கவனம், சிலுவையில் தொங்கியபடி, அனைத்து மக்கள் மீதும் கிறிஸ்து காட்டிய பரிவிரக்கம், உயிர்த்த ஆண்டவரின் கொடைகளைப் பெற்ற திருஅவையின் மகிழ்வு ஆகியவற்றைச் சிந்திக்க, செபமாலை உதவுகிறது.

மரியாவின் கவனம். கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்போது மரியா காட்டிய முழு கவனத்தைப்போல் இவ்வுலகில் வேறு யாரும் காட்டியிருக்க முடியுமா? அந்த உன்னத தருணத்திற்காக, இறைவன், மரியாவை, கவனத்துடன் தயார் செய்தார். அதே வண்ணம், இறைவன் நம்மையும் தயார் செய்கிறார். நமது செபம், தியானம் ஆகியவை வழியே, அவரது குரலுக்கு கவனமுடன் செவிமடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இறைவன் மீது நாம் செலுத்தும் கவனம், இவ்வுலகையும் அவரது கண்ணோட்டத்துடன் காண உதவுகிறது. நாம் பணியாற்றும் மக்களின் மகிழ்வை, துயரங்களை, தேவைகளை புரிந்துகொள்ள உதவுகிறது.

கிறிஸ்துவின் பரிவிரக்கம். செபமாலையில் நாம் தியானிக்கும் துயர மறையுண்மைகள், கிறிஸ்துவின் பாடுகள் வழியே வெளிப்படும் மீட்பின் சக்தியைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. குருத்துவம், மற்றும், துறவற வாழ்வு, நம் ஒவ்வொருவரின் சுய முன்னேற்றத்தை வளர்த்துக்கொள்ளும் வேலை அல்ல. மாறாக, கிறிஸ்துவின் தியாகம் நிறை அன்பில் பங்கேற்கும் பணிவாழ்வு அது. மக்களுடன் இணைந்து செல்லும்போது, கிறிஸ்துவின் பரிவிரக்கத்தை நாமும் வெளிப்படுத்துகிறோம்.

திருஅவையின் மகிழ்வு. மரணத்தின் மீது கிறிஸ்து அடைந்த வெற்றி, நம்மை மகிழ்வால் நிரப்புவதற்கு செபமாலை வழி செய்கிறது. நற்செய்தியின் மகிழ்வை பறைசாற்றுவதே நம் பணியின் இலக்கு. நமது வாழ்விலும், பணியிலும், பிரச்சனைகள், துன்பங்கள் சூழ்ந்தாலும், தீமையின்மீது கிறிஸ்து கொள்ளும் வெற்றியை நம்பவேண்டும்.

கிறிஸ்துவைப்போல் வாழ நாம் முற்படும் வேளையில், நமது மகிழ்வு இன்னும் ஆழமாகிறது என்பதை, நீங்கள் இங்கு பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் உணர்த்துகின்றன. கிறிஸ்துவைப்போல் வாழ்வது இயலாதது என்ற மலைப்பை உணர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளால் அது எளிதாகிவிடும்.

மனம் தளரவேண்டாம். ஏனெனில், நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு என்று கருதுங்கள் (2 பேதுரு 3:15). கிறிஸ்துவுக்காகப் பணியாற்றும் உங்கள் பிரமாணிக்கத்திற்காக நன்றி கூறுகிறேன். உங்கள் அனைவருக்கும் என் செபங்களை உறுதி கூறுகிறேன். எனக்காகச் செபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.