2017-12-02 15:59:00

செபமாலை அன்னை ஆலயத்தில் குருக்கள், துறவியர் சந்திப்பு


டிச.02,2017. பங்களாதேஷ் நாட்டின், சிட்டகாங்க் உயர்மறைமாவட்டத்தின் பேராலயமாகிய செபமாலை அன்னை ஆலயம், 16ம் நூற்றாண்டில், போர்த்துக்கீசிய அகுஸ்தீன் சபை மறைப்பணியாளர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில், பங்களாதேஷ் நாட்டின், ஏறக்குறைய 1,500, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர்கள், புகுமுகு துறவியர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். வருகைப்பாடலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், முதலில், சிட்டகாங்க் பேராயர் மோசஸ் கோஸ்ட்டா அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பங்களாதேஷின் 16 கோடி மக்கள் தொகையில், கிறிஸ்தவர்கள் ஒரு விழுக்காடுகூட இல்லை. ஆயினும், இந்நாட்டில், அருள்பணியாளர்களும், துறவியரும் மிகவும் மதிக்கப்படுகின்றனர். வலுவான அறநெறி அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான அருள்பணியாளர்களும், துறவியரும், பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தவர்கள். இறையழைப்பும் திருப்திகரமாக உள்ளது. திருஅவைக்கு, தங்கள் பிள்ளைகளை தாராளமனத்துடன் உவந்தளிக்கும் எங்கள் பெற்றோருக்கு நன்றி சொல்கிறோம். ஏழ்மை, சிறுபான்மையினர் மீதும், மறைப்பணிகள் மீதும் கட்டுப்பாடுகள் போன்ற சவால்களை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கின்றோம். எனினும், உலகம் முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கின்றேன் என்ற, இயேசுவின் பிரசன்னம் எங்களுக்கு ஆறுதலாகவும் வலிமையாகவும் உள்ளது. திருத்தந்தையே, தங்களின் வருகைக்கு நன்றி. தங்களின் ஆசீரை இறைஞ்சுகிறோம். இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள், தங்களுக்காக, தொடர்ந்து செபிக்கின்றார்கள். இவ்வாறு, பேராயர் கோஸ்ட்டா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

பேராயர் கோஸ்ட்டா அவர்களின் வரவேற்புரைக்குப்பின், மறைமாவட்ட அருள்பணி ஆபெல் ரொசாரியோ, பிமே மறைப்பணி சபையின் அருள்பணி பிராங்கோ காஞ்ஞாஸ்ஸோ, அருள்சகோதரி மேரி சந்திரா, திருச்சிலுவை சபையின் அருள்பணி லாரன்ஸ் டயஸ், ஒரு குருத்துவ மாணவர் ஆகியோர் சாட்சியங்கள் சொன்னார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் அருள்பணியாளராக உள்ளேன். எனது குருத்துவ திருநிலைப்பாட்டு நாள், என் வாழ்வில் மிகவும் மகிழ்வான நாள். இறைவார்த்தையை என் வாழ்வு முழுவதும் பகிர்வதே எனது விருதுவாக்கு. வாழ்வில், ஏற்றத்தாழ்வுகளையும், தனிமையையும், வெறுமையையும் உணர்ந்துள்ளேன். ஆயினும் என்னை அழைத்த ஆண்டவரில் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரே என்னை ஒவ்வொரு நாளும் வழிநடத்தி சக்தி அளிக்கின்றார் என்று, அருள்பணி ஆபெல் ரொசாரியோ அவர்கள் திருத்தந்தையிடம் தெரிவித்தார். இவர்களின் சாட்சியங்களைக் கேட்டதற்குப் பின்னர், திருத்தந்தை தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தை இவர்களுக்கென ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரை, அவர்களிடம் பின்னர் கொடுக்கப்பட்டது. Tejgaon செபமாலை அன்னை ஆலயத்தில் செப நிகழ்வை நிறைவு செய்து திருத்தந்தை வெளியே வந்தபோது, அவ்வாலய முகப்பில் காத்திருந்த ஏராளமான விசுவாசிகளிடம், “இந்த மகிழ்வான வரவேற்பிற்கு மிக்க நன்றி. எனக்காகச் செபியுங்கள் என்று கேட்கிறேன். மேலும், உங்களுக்கு ஓர் ஆலோசனை சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்வதற்கு முன், அன்னை மரியாவை நோக்கி, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தைச் சொல்லுங்கள். இதைச் செய்வீர்களாக” என்று கேட்டு, அந்த இடத்தில் எல்லாருடனும் சேர்ந்து இச்செபத்தை செபித்தார் திருத்தந்தை. பின்னர் அவர்களை ஆசீர்வதித்தார். மிக்க நன்றி என்று சொல்லிய திருத்தந்தை, செபமாலை அன்னை பங்கின் கல்லறையையும், 1677ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட பழைய செபமாலை அன்னை ஆலயத்தையும் பார்வையிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தக் கல்லறைத் தோட்டத்தில் துறவறத்தார் பலரின் கல்லறைகள் உள்ளன. இங்கு மெழுகுதிரி ஏற்றி வைத்து செபித்தார் திருத்தந்தை. மேலும், இந்த பழைய செபமாலை அன்னை ஆலயத்தில், ஏறக்குறைய 200 கைவிடப்பட்ட சிறாரும், சில அருள்சகோதரிகளும் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். தினாஜ்பூர் ஆயர் செபஸ்தியான் டுடு அவர்கள், திருத்தந்தையை வரவேற்றார். அவ்வாலயத்தில் இருந்தவர்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. இந்த நிகழ்வு நிறைவடையும் போது உள்ளூர் நேரம் பகல் 12 மணியாக இருந்தது. அப்போது இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை பகல் 11.30 மணியாகும். பழைய செபமாலை அன்னை ஆலயத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள டாக்கா திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.