2017-12-02 15:50:00

திருத்தந்தையின் 21வது வெளிநாட்டு திருத்தூதுப் பயண நிறைவு


டிச.02,2017. கத்தோலிக்கத் திருஅவை, ஏழைகளின் தோழமையில் பணியாற்ற வேண்டும், காழ்ப்புணர்வு, ஊழல், ஏழ்மை, வன்முறை ஆகியவற்றுக்கு எதிராய், மதங்கள் செயல்பட வேண்டும், வறியோர், புலம்பெயர்ந்தோர், நசுக்கப்படும் சிறுபான்மையினர் ஆகியோரின் ஆதரவாக மதங்கள் பணிபுரிய வேண்டும், விசுவாசிகள் அருள்பணியாளர்களுக்காகச் செபிக்க வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு,  பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், இவ்வெள்ளியன்று அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்களாதேஷில் Cox’s Bazarல், முகாமிலுள்ள ரொங்கிங்யா முஸ்லிம் புலம்பெயர்ந்த மக்களில் 12 ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரு சிறாரை, டாக்கா பேராயர் இல்லத் தோட்டத்தில் சந்தித்தார். இந்த முஸ்லிம் மக்கள் சொன்னதை அக்கறையுடன் கேட்டு, அவர்களை அன்போடு அரவணைத்தார் திருத்தந்தை. டிசம்பர் 02, இச்சனிக்கிழமையன்று, “நம்மைவிட வித்தியாசமாக சிந்தித்து செயல்படுபவர்களை, வரவேற்று, ஏற்கும் வழிமுறையை அறிவதற்கு கடவுளின் ஞானம் நமக்கு உதவுவதாக” என்ற வார்த்தைகளை, தன் டுவிட்டரில் வெளியிட்டு, இந்நாளைய திருத்தூதுப் பயண நிகழ்வுகளை ஆரம்பித்தார் திருத்தந்தை. கடந்த இரு நாள்களாக டாக்காவில் தான் தங்கியிருந்த திருப்பீடத் தூதரகத்தில், உள்ளூர் நேரம் காலை 7.45 மணிக்கு, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அத்தூதரகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லி, அவ்விடத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Tejgaon சென்றார். டாக்கா நகரின் முக்கியமான Tejgaon பகுதியில், பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. இது, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியுமாகும். Tejgaon செபமாலை அன்னை பங்கு வளாகத்திலுள்ள அன்னை தெரேசா இல்லத்தில், உடலளவிலும், மனத்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கைவிடப்பட்ட சிறார் ஆகியோர், ஆயிரக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இல்லத்திலுள்ளவர்களைப் பார்வையிட்டு, ஆசீர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபமாலை அன்னை பங்கு ஆலயத்திற்குச் சென்றார். அங்கு, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர்கள், புகுமுகு துறவியர் ஆகியோரைச் சந்தித்தார். அவ்வாலய வாளாகத்திலுள்ள கல்லறைத் தோட்டத்திற்கும் சென்று, மெழுகுதிரி ஏற்றி வைத்து செபித்தார். பின்னர், மாலையில், டாக்கா நோத்ரு தாம் கல்லூரியில், ஆயிரக்கணக்கான இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை. இச்சந்திப்பை நிறைவுசெய்து, டாக்கா பன்னாட்டு விமான நிலையம் சென்று பிரியாவிடை சொல்லி, பங்களாதேஷ் நாட்டின் பிமான் விமானத்தில் உரோம் நகருக்குப் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது உள்ளூர் நேரம் மாலை 5 மணி 5 நிமிடமாகும். இத்துடன், மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான திருத்தந்தையின் 21வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. திருத்தந்தையின் இப்பயணம் இந்நாடுகளுக்கு அமைதி, ஒப்புரவு மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதாக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.