2017-12-04 15:12:00

பாசமுள்ள பார்வையில்.. சேவையால் ஒளிரும் தாய்


“எனது அம்மா இறக்கும்போது எனக்கு வயது 25. அதுவரை அம்மா இவ்வளவு புகழ்பெற்ற மனிதர் என்பது எங்களுக்கே தெரியாது. எல்லா அம்மாக்களைப் போலவும் விதவிதமாகச் சமைத்துக் கொடுப்பார், கதைகள் சொல்வார். அம்மா இறந்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதும், எங்கள் வீட்டுக்கு எவ்வளவு புகழ்பெற்றவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது”. இவ்வாறு முன்னாள் ஹாலிவுட் நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் அவர்கள் (Audrey Hepburn) பற்றி, அவரின் மகன் Luca Dotti சொன்னபோது உலகமே வியப்படைந்தது. ஹாலிவுட்டின் பொற்காலத்தில் புகழ்பெற்றிருந்த ஆட்ரி ஹெப்பர்ன், ஒரு கட்டத்தில் தன் மகன்களை வளர்ப்பதற்காக நடிப்பை நிறுத்தியவர். 1954ம் ஆண்டில், யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஆட்ரி. போர்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த எத்தியோப்பியாவுக்கு, 1988ம் ஆண்டில் களப்பணிக்காகச் சென்றார். அடுத்து, துருக்கிக்கு நோய்த் தடுப்புப் பிரசாரத்துக்காகச் சென்றார். அங்கே இராணுவமும் மக்களும் கொடுத்த ஒத்துழைப்பால், பத்து நாள்களில் நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்கிவிட்டு, தன் குழுவினருடன் திரும்பினார் ஆட்ரி. அதே ஆண்டு வெனெசுவேலா, ஈக்குவதோர் போன்ற தென் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று, குழாய்கள் மூலம் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டிக்கொடுத்தார். பின்னர், வியட்நாம், பங்களாதேஷ் நாடுகளுக்குச் சென்று பணியாற்றினார் அவர். பங்களாதேஷில் அவருடன் பணியாற்றிய புகைப்படக்காரர் ஜான் ஐசக் இவ்வாறு சொல்லியிருக்கிறார். “முகாம்களில் இருக்கும் குழந்தைகள் தூய்மையின்றிக் காட்சியளிப்பார்கள். அவர்களை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். எங்களுடன் வந்தவர்கள்கூட குழந்தைகளை நெருங்குவதற்குச் சிறிது தயக்கம் காட்டுவார்கள். ஆனால், கொஞ்சமும் தயக்கமின்றி, அந்தக் குழந்தைகளைக் கட்டியணைப்பார் ஆட்ரி ஹெப்பர்ன். அவரே உணவூட்டுவார், மருந்து கொடுப்பார், அன்பாகப் பேசுவார். 1992ம் ஆண்டு சொமாலியா சென்றார் ஆட்ரி. இவ்வாறு யுனிசெஃப் அமைப்புக்காக ஐந்தாண்டுகள் தீவிரமாகக் களப்பணியாற்றினார் ஆட்ரி. பிரெஞ்சு, இத்தாலியம், ஆங்கிலம், டச்சு, இஸ்பானியம் போன்ற மொழிகளை அறிந்திருந்ததால், அவரால் பலருடனும் எளிதில் பழக முடிந்தது. எளிய உடையில், அன்பான அணுகுமுறைகளால், மக்களோடு மக்களாகக் கலந்துவிடுவார் ஆட்ரி. அவர் சென்ற எந்த நாட்டிலும் தன்னை ஒரு நடிகையாக காட்டிக்கொள்ளவே இல்லை என்று சொல்லப்படுகின்றது. சொமாலியாவிலிருந்து திரும்பிய ஆட்ரி ஹெப்பர்ன், குடல்வால் புற்றுநோயால் 1993ம் ஆண்டு காலமானார். நோய்க்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், அவரின் யுனிசெஃப் பணிக்காக அமெரிக்காவின் மிக உயரிய விருதான Presidential Medal of Freedom’வழங்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.