2017-12-04 16:18:00

‘செவிமடுத்தல், ஆய்ந்துணர்தல், வாழ்வாக்குதல்’வழியே அழைப்பு


டிச.,04,2017. ஒவ்வொருவரும் தங்கள் அழைப்புக்கு இயைந்தவகையில் வாழ்வதற்கு, ‘செவிமடுத்தல், ஆய்ந்துணர்தல், மற்றும் அவற்றை வாழ்வாக்குதல்’ என்ற மூன்று கூறுகள் தேவைப்படுகின்றன, என 2018ம் ஆண்டிற்குரிய இறையழைத்தல் தினத்திற்கு வழங்கிய செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்கள் ஒவ்வொருவரின் அழைப்பும் வேறுபட்டதாக இருப்பினும், மேலிருந்து வரும் நம் அழைப்பின் வார்த்தைகளுக்கு செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து, அவ்வார்த்தைகளை வாழ்ந்துகாட்டுவதன் வழியாக, நாம் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், மீட்பின் கருவிகளாக மாறவும், முழு மகிழ்வை நோக்கி நடக்கவும் உதவி பெறுகிறோம் என அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

வரும் ஆண்டு சிறப்பிக்கப்படும் 55வது உலக இறையழைத்தல் தினத்திற்கு, 'செவிமடுத்தல், ஆய்ந்துணர்தல், வாழ்வாக்குதல்' என்ற கூறுகளை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மூன்று கூறுகளுக்குரிய எடுத்துக்காட்டுகளை இயேசுவின் வாழ்விலிருந்து சுட்டிக்காட்டி விவரித்துள்ளார்.

இரைச்சல் நிறைந்த இன்றைய உலகில், அமைதியாக செவிமடுத்தலும், எதையும் உள்வாங்கி ஆய்வு செய்தலும் சிரமமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன் வாழ்வுக்குள்ளேயே இறைவனின் அழைப்பைக் கண்டுகொள்ளும் திறனில் வளரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் அக்டோபரில், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், இளையோர் குறித்து, குறிப்பாக இளையோருக்கும், விசுவாசத்திற்கும், அழைத்தலுக்கும் இடையே உள்ள உறவு குறித்து விவாதிக்க உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1963ம் ஆண்டு, திருத்தந்தை அருளாளர் ஆறாம் பால் அவர்களால் நிறுவப்பட்ட இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாள், 2018ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, நல்லாயன் ஞாயிறன்று, 55வது முறையாகச் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.