2017-12-05 14:32:00

ஈராக்கின் எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களின் நெருக்கடி நிலை


டிச.05,2017. ஈராக்கில் கிறிஸ்தவர்கள், தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பி, அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புடனும், மாண்புடனும் வாழ்வதற்கு, திருப்பீடம் அதிகமான முயற்சிகளை எடுக்கும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் உறுதியளித்தார்.

ஈராக்கின் நினிவே சமவெளியை ஐ.எஸ். இஸ்லாமிய அரசு ஆக்ரமித்துள்ளவேளை, ஐ.நா. தலைமையகத்தில் கடந்த வாரத்தில் ஐ.நா. குழு ஒன்று நடத்திய கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்தார், ஐ.நா.வில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, நினிவே சமவெளிப் பகுதியில், பன்மைத்தன்மை மற்றும், பல்வேறு சமூகங்களின் நல்லிணக்க வாழ்வை ஒழிக்கும் வழிகளைத் தேடுகின்றது என்று குறை கூறிய, பேராயர் அவுசா அவர்கள், நினிவே பகுதியில், பன்மையில் ஒருமைத்தன்மையை உடனடியாக நிலைநாட்டுவதன் வழியாக, ஐ.எஸ். அரசின் நடவடிக்கைகளைத் தோற்கடிக்க இயலும் என்றும் பகிர்ந்துகொண்டார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடந்த இக்கலந்துரையாடலில், ஈராக்கின் எர்பில் பேராயர் Bashar Warda, Knights of Columbus அமைப்பின் தலைவர் Carl Anderson உட்பட, பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நினிவே பகுதியில், சிறுபான்மையினரின் உரிமைகள் மட்டுமின்றி, அப்பகுதியில் வாழ்கின்ற ஒவ்வொருவரின் உரிமைகளுமே அழிக்கப்படுகின்றன என்று, Anderson அவர்கள், இக்கலந்துரையாடலில் கவலை தெரிவித்தார். 

ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.