2017-12-05 14:45:00

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயர்கள் அழைப்பு


டிச.05,2017. இந்தியாவின் தென் பகுதியைக் கடுமையாய்த் தாக்கியுள்ள ஒக்கி புயலில் பலியானவர்களுக்காகச் செபித்துள்ள அதேவேளை, இப்புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட, தென் கடற்கரைப் பகுதியைத் தாக்கிய ஒக்கிப் புயலில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க மீனவர்களில் குறைந்தது 32 பேர் இறந்துள்ளனர் மற்றும், 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 

டிசம்பர் 1,2 நாள்களில் தமிழ்நாடு, கேரளா, இலட்சத்தீவுகள் ஆகிய பகுதியைத் தாக்கிய ஒக்கிப் புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர், இந்திய ஆயர்கள்.

560க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாகவும், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், ஒரு பக்கமும் சேதமடைந்துள்ளன மற்றும் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

டிசம்பர் 10, வருகிற ஞாயிறன்று, இந்தியாவின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபம் செய்ய வேண்டுமெனவும், அந்நாளில் அம்மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறும், இந்திய ஆயர் பேரவையின் தலைவரான, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்திய ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பு, இடர்துடைப்புப் பணிகளை ஆற்றி வருகின்றது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.