2017-12-05 15:36:00

தாழ்ச்சியாய் இருப்பது,இயேசுவைப் போல அவமதிப்புக்களை ஏற்பது


டிச.05,2017. தாழ்ச்சி, கிறிஸ்தவ வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத பண்புகளில் ஒன்றாகும் என்றும், இப்பண்பு, தூய ஆவியாரின் கொடைகள் நம்மில் வளர்வதற்கு அவசியம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகமான இறைவாக்கினர் எசாயா பகுதியிலிருந்து (எச.11,1-10) மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு ஆகிய கொடைகளை அருளும் ஆண்டவரின் ஆவியார் தங்குகின்ற தளிராக, ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ வேண்டும் என்று கூறினார்.

தூய ஆவியாரின் இந்தக் கொடைகள், தளிரின் சிறிய நிலையிலிருந்து, ஆவியாரின் முழுமையில் வளர்கின்றன, இதுவே இறையாட்சி, இதுவே கிறிஸ்தவ வாழ்வு என்றுரைத்த திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் அந்தத் தளிரிலிருந்து வளரும் தண்டு, இது தூய ஆவியாரின் வல்லமையில் வளர வேண்டும் என்பதை உணர்ந்திருப்பது கிறிஸ்தவர்களின் கடமை என்றும் கூறினார். 

இந்தச் சிறிய தளிர், இந்தச் சிறிய கொடை, தூய ஆவியாரின் கொடைகளின் முழுமையில் வளர்கின்றது என்பதை நம்புவதற்கு, விசுவாசமும், தாழ்ச்சியும் தேவைப்படுகின்றன என்றும், கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறை, இயேசுவின் வாழ்வு முறைகளில் ஒன்றான தாழ்ச்சி என்ற பண்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.  தாழ்ச்சியாய் இருப்பது என்பது, அடக்கமாக இருப்பது அல்லது கண்களை மூடிச் செபிப்பது என்ற அர்த்தமில்லை, தாழ்ச்சியாய் இருப்பது என்பது, அவமானங்களை ஏற்கும் திறனைக் கொண்டிருப்பதாகும் என்றும், திருத்தந்தை கூறினார். அவமதிப்புகள் இல்லாத தாழ்ச்சி, தாழ்ச்சியே இல்லை, தாழ்ச்சியுள்ளவர், இயேசுவைப் போன்று அவமதிப்புகளை ஏற்றுக்கொள்வார் என்றும் மறையுரையில் திருத்தந்தை கூறினார். இயேசுவைப் போன்று இருப்பதற்கு, அவமானங்கள் வேண்டும் எனக் கேட்ட, புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு பற்றியும் விளக்கிய திருத்தந்தை, ஆவியாரின் கொடைகளை முழுமையாகப் பெறுவதற்கு, ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் எனவும் கூறி, மறையுரையை நிறைவு செய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.