சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் அடையாள பயணம்

புதன் மறைக்கல்வி உரையின்போது - AFP

06/12/2017 14:55

டிச.,06,2017. மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் தன் ஒரு வாரப் பயணத்தை நிறைவு செய்து, கடந்த சனிக்கிழமை இரவு உரோம் நகர் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, மறைக்கல்வி உரையில், தன் இத்திருத்தூதுப் பயணம் குறித்தே எடுத்துரைத்தார். தன் பயண நினைவுகளை திருப்பயணிகளோடு பகிர்ந்துகொள்வதற்கு முன்னர், மத்தேயு நற்செய்தி பிரிவு 5ல், இயேசு மக்களை நோக்கி, 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாயிருக்கிறீர்கள்......நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என உரைத்த பகுதி வாசிக்கப்பட்டது.

அன்பு சகோதர சகோதரிகளே! என் அண்மைப் பயணத்தில் மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் மக்களுடன் இடம்பெற்ற சந்திப்புகள் மறக்க முடியாதவை. அனைத்து வகையான சந்திப்புகளும் மிகப்பெரிய அளவில் பயன்தருபவைகளாக இருந்தன. சுதந்திரம் மற்றும் அமைதியை உள்ளடக்கிய‌ புது அனுபவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மியான்மார் நாட்டிற்கு, திருத்தந்தை ஒருவரின் முதல் பயணமாக, என் பயணம் இருந்தது. சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் எவரும் விடுபடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதிக்கப்பட்டு, அவர்களுடன் ஆன பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து, மியான்மார் நாட்டு இளையோருக்கு என, நிறைவேற்றிய திருப்பலியிலும், புத்த மதத்தினரை அதிகமாகக் கொண்ட இந்நாட்டில், பல்வேறு மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும், அரசு அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புகளிலும் வலியுறுத்தினேன். இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பங்களாதேஷ் நாட்டில், கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இடம்பெற வேண்டிய கலந்துரையாடல்கள், மற்றும், ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து நான் வலியுறுத்தினேன். ரொஹிங்கியா புலம்பெயர்ந்தோர் குறித்த நெருக்கடிகளின் மத்தியில் பங்களாதேஷ் நாடு, அம்மக்களுக்கு உதவிகளை வழங்க எடுத்துவரும் முயற்சிகளுடன் என் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தேன். கத்தோலிக்க சமுதாயத்துடன் ஆன கொண்டாட்டங்களில் மிக முக்கியமானதாக, கோடிட்டுக் காட்டும்படியானதாக இருந்தது, இளையோருக்கு நிறைவேற்றிய திருப்பலியாகும். இதில், இஸ்லாம், மற்றும், வேறு பல மதங்களின் இளையோரும் பங்குபெற்றனர். இவ்வகையில், என்னுடைய மேய்ப்புப்பணி சார்ந்த இத்திருத்தூதுப் பயணம், பங்களாதேஷ் நாட்டிற்கும், ஆசியாவிற்கும், உலகம் முழுமைக்கும் நம்பிக்கையின் அடையாளமாக நிறைவுக்கு வந்தது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் நகர் தொடர்பாக அண்மையில் உருவாகியுள்ள பதட்ட நிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/12/2017 14:55