சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

மியான்மார், பங்களாதேஷ் பயணங்கள் குறித்து கர்தினால் பரோலின்

பங்களாதேஷ் நடனக்கலைஞருடன் கர்தினால் பரோலின் - AP

06/12/2017 15:10

டிச.06,2017. மியான்மார், பங்களாதேஷ் நாடுகளின் எல்லைகளில் நிகழும் கொடுமைகளுக்குத் தீர்வுகள் காண்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொள்கையளவில் சில தீர்வுகளை வழங்கியுள்ளார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

நவம்பர் 27ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில் மேற்கொண்ட 21வது திருத்தூதுப் பயணத்தைக் குறித்து கர்தினால் பரோலின் அவர்கள் அளித்துள்ள இப்பேட்டியில், இவ்விரு நாடுகளிலும் பெண்கள் தலைமை வகிப்பதை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆங் சான் சூச்சி, ஷேக் ஹசீனா ஆகிய இரு பெண் தலைவர்களும், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில், மக்களுக்கு நன்மைகள் செய்து, அவர்களது நம்பிக்கையையும், நன் மதிப்பையும் பெற்றுள்ளனர் என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் கூறியுள்ளார்.

இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவும் ரொகிங்கியா மக்களின் பிரச்சனைக்கு, திருத்தந்தையின் பயணம் உடனடியாக ஒரு தீர்வாக அமையாது எனினும், திருத்தந்தையின் கூற்றுகள், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொள்கையளவில் வழிகாட்டும் என்று தான் நம்புவதாக, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

இவ்விரு நாடுகளிலும் மிகச் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஊக்கம் அளிப்பதே தன் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று திருத்தந்தை குறிப்பிட்டது, கிறிஸ்தவர்களுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆசிய நாட்டு மக்கள், விருந்தினர்களுக்கு காட்டும் மரியாதை கலந்த விருந்தோம்பல், தன்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளிலும், இதே மதிப்பையும், வரவேற்பையும் தான் உணர்ந்ததாகக் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/12/2017 15:10